கச்சா எண்ணெய் விலை 60 டாலர் வரை சென்றாலும் பாதிப்பு இல்லை: ஜெயந்த் சின்ஹா தகவல்
கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 50 டாலரை தொட்டிருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை 60 டாலர் வரை சென்றால் கூட நிதி நிதிப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகரிக்காது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இந்திய பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலர் முதல் 60 டாலராக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கு மேலே செல்லும் போது சிக்கல் உண்டாகும். பெரும்பாலான வல்லுநர்கள் இந்த நிலையிலேயே கச்சா எண்ணெய் விலை இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
நிச்சயமாக கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. இதே நிலைமையில் தொடரும் போது நம்மால் சூழ்நிலையை சிறப்பாகக் கையாள முடியும். இதற்கு மேலே உயரும்போது சிக்கல் மேலும் அதிகரிக்கும் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.
கச்சா எண்ணெய் விலை சரிவால் பலனடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவு கணிசமாக குறைந்தது. இந்தியா வின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்கு மதி செய்யப்படுகிறது.
கடந்த 2015-16-ம் ஆண்டு 6,396 கோடி டாலர், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவு செய்திருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 11,270 கோடி டாலரும், 2013-14-ம் நிதி ஆண்டில் 14,300 கோடி டாலரும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் இதே கருத்தை தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது பொருளாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப் பும் இருக்கிறது என்று கூறினார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 5 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.99 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 9.79 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயரும் பட்சத்தில் மொத்த விலை குறியீட்டு எண் 0.02 சதவீதம் அதிகரிக்கிறது. அதேபோல டீசல் விலை ஒரு ரூபாய் உயரும் போது மொத்த விலை குறியீட்டு எண் 0.07 சதவீதம் அதிகரிக்கிறது.
கடந்த 2014-15-ம் ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த சமயத்தில் கூடுதல் வருவாய்க்காக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தொடர்ந்து உயர்த்தியது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.11.77 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டது.