என் பாதையில்: வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் அழகு!

என் பாதையில்: வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் அழகு!

4“விலைமதிப்பற்றது வாழ்க்கை. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து வாழ வேண்டும்” – எனக்குப் புற்றுநோய் என்று டாக்டர் உறுதி செய்ததும் இந்த எண்ணம்தான் முதலில் தோன்றியது .

நான் அப்போது மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். கணவர், அரசுப் பள்ளி ஆசிரியர். மகள் பி.இ.; மகன் எட்டாம் வகுப்பு என்று நேர்க்கோட்டில் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை வளைந்து நெளிய ஆரம்பித்தது. 2009, செப்டம்பர் மாதம் என் வலது மார்பகத்தில் வலியில்லாத கட்டி இருப்பதை உணர்ந்து அது புற்றுக்கட்டியாக இருக்குமோ என பயந்துபோய் என் சின்னக்காவிடம் சொன்னேன். அவர் உடனடியாக டாக்டரைப் பார்க்கச் சொன்னார். கூச்சம் காரணமாக டாக்டரிடம் செல்லவே பிடிக்கவில்லை. சின்னக்காவின் தொடர் வற்புறுத்தலால் டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். மேமோகிராம் எடுக்கப்பட்டுப் புற்றுக்கட்டியாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டது. அப்போதுதான் திடீர் பிரேக் போட்டது போல் எனக்கும் இறப்பு வரும் என்ற உண்மை உறைத்தது. உலகம் மிக மிக அழகாகத் தோன்ற, வாழ வேண்டும் என்கின்ற ஆசை மனதில் துளிர் விட்டு வளர்ந்தது.

மதுரையில் என்னைக் கவனிக்க ஆள் இல்லாததால் கோயம்புத்தூரில் இருந்த அம்மா வீட்டுக்குச் சென்றேன். அம்மா வீட்டில் சாத்திய அறையில் இருளின் துணையுடன் இருக்கத்தான் எனக்குப் பிடித்தது. எனக்கு ஏன் இந்த நிலை என்ற கேள்விக்கான பதிலைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் .

என் பெரியக்கா மட்டும் அந்த அறையில் என் நிழலாக ஒரு கணமும் பிரியாமல் இருந்தார். என் தங்கை காலையில் எனக்குத் தேவையான சாப்பாட்டைச் செய்துவிட்டு வேலைக்குச் செல்வாள். மாலை வீட்டுக்கு வந்ததும் என்னுடனேயே இருப்பாள். அண்ணன் முடிந்தபோதெல்லாம் வந்தார். அம்மாதான் பார்க்கும்போதெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தார்.

டாக்டரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் வாகனங்களில் பறந்துகொண்டிருந்த மக்களைப் பார்த்தபோது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. மரணம் எந்த நேரம் வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரும் சூழலில் இவர்களெல்லாம் எதைத் தேடி ஓடுகிறார்கள் என்று தோன்றியது.

எனக்குப் புற்றுநோய்தான் என்று ‘பயாப்சி’ உறுதிப்படுத்த, குடும்பத்தில் எல்லோரும் உடைந்து போனார்கள். நான் கொஞ்சமாவது தைரியமாக இருந்தால்தான் வீடே தைரியமாகும் என உணர்ந்து என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டேன். என் குடும்பத்தினரின் பச்சாதாபப் பார்வையைத் தவிர்க்க என் தங்கை மகனை அழைத்து அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தேன்.

முதலில் பார்த்த டாக்டர் எனது வயது முதிர்வின் காரணமாக அறுவை சிகிச்சை எண்ணத்தை விட்டுவிட்டதால் வேறு ஒரு டாக்டரிடம் சென்றோம். அவரோ, நோய் உடம்பின் வேறு பாகங்களுக்கும் பரவியிருக்கலாம் என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு நிறைய பரிசோதனைகளை எடுக்கச் சொன்னார். “புற்றுநோயில் நான்கு கட்டங்கள் இருக்கு. நீங்க மூணாவது கட்டத்தில் இருக்கீங்க. ரொம்ப ரிஸ்க்கானது. கட்டி 5 செ.மீ. இருக்கு. ஆபரேஷனைத் தவிர வேற வழியே இல்ல” என்றார்.

அவர் பேசப் பேச எனக்கு வெளியே ஓடிவிடலாம் போல் இருந்தது. மறுநாள் டாக்டர் குகனிடம் அழைத்துச் செல்ல, அவர் இரண்டொரு நிமிடங்களில் என்னைச் சோதித்துப் பார்த்துவிட்டு, “சரியாக்கிடலாம்” என்றார். டாக்டரின் வார்த்தைகளும் நோயாளிகளுக்கு மருந்துதான். நான் காற்றில் மிதந்தேன்.

என் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததுமே எல்லோருமே நிம்மதியானார்கள். எனக்குதான் மார்பகத்தை நீக்குவது என்பது ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தது. இந்நிலையில் ஒரு நாள் என் தம்பியின் நண்பருடைய அக்கா ராதா என்னைப் பார்க்க வந்தார். ராதாவும் என்னைப் போன்று புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி ஒரு மார்பகம் நீக்கப்பட்டவர். இப்போது குணமாகி இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டவர். ரொம்பவும் உற்சாகமாக இருந்த ராதாவைப் பார்த்ததுமே எனக்கு நம்பிக்கை வந்தது. அவர் உற்சாகத்துடன் பேசிப் பேசி நம்பிக்கையூட்ட, மனம் தெளிவானது எனக்கு.

என் உடன்பிறந்தோர் புடைசூழ என் முதல் கீமோ அரங்கேறியது. அப்சர்வேஷனில் வைக்க வேண்டுமென்று டாக்டர் சொன்னதால் அன்றிரவு சின்னக்கா மட்டும் என்னுடன் தங்கினார். அரைகுறை மயக்கத்தில் நான் கண் விழித்தபோதெல்லாம் அக்கா விழித்துக்கொண்டுதான் இருந்தார். அறைக்கு வெளியே அவ்வப்போது கேட்ட காலடி ஓசைகளும் .:பேனின் ஓசையுமே எங்களுக்குப் பெரிய ஆறுதலைத் தந்தன. சத்தங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.

கீமோ முடித்த மறுநாள்தான் வந்தது வினை. தலைச்சுற்றலும் வாந்தியும்! இரண்டு நாட்கள் கழித்துத் தலை வாரிக்கொண்டிருந்தபோது கொத்துக் கொத்தாக முடி கையோடு வந்தது. அரண்டு போய்க் கண்ணாடியில் பார்த்தபோது கறுத்து, தோல் சுருங்கி, புருவம் உதிர்ந்து மொட்டைத் தலையுடன் நான்! அதன் பின் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கண்ணாடி பக்கமே செல்லவில்லை. என் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த என் குடும்பத்தாரை நான்தான் தேற்ற வேண்டிவந்தது.

என் இரண்டு அக்காக்களும் ஒரு நாள் என்னைக் கடைக்கு அழைத்துச் சென்று கலர் கலராகப் பாசி மணிகள், கம்பி, ஊக்கு என்றெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். அதை வைத்து நான் விதவிதமாகக் கம்மல், வளையல், கொலுசு எல்லாம் செய்ய அதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போட்டி போட்டுக் காசு கொடுத்து வாங்கியதோடு மட்டுமல்லாது ஆர்டரும் கொடுத்ததுதான் உச்சம். “நாம இவள பத்திக் கவலைப்பட்டுட்டு இருக்கோம். இவளோ சுடச்சுட பிஸினஸ் பண்ணிட்டு இருக்கா” என்று என் வீட்டில் உள்ளவர்கள் பெருமையோடு சலித்துக்கொண்டார்கள். நம்மை ஒரு கவலை, பிணந்தின்னிக் கழுகாய்ப் பிய்த்துத் தின்னும்போது நம் கவனத்தை வேறு திசையில் திருப்பினால் அந்தக் கழுகு பறந்து போகும் என்பதை உணர்ந்தேன்.

அறுவை சிகிச்சை நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. விடுப்பு எடுத்துக்கொண்டு என் கணவர், மகனுடன் வந்து சேர்ந்தார். என் தோற்றத்தைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த என் மகன், உடனே சுதாரித்துக்கொண்டு தாவி வந்து கட்டிப் பிடித்தபோது வாழ வேண்டுமென்ற ஆசை ஆழமானது.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து இரவா பகலா என்று தெரியாத அரைகுறை மயக்கத்தில் நான் இருந்தபோது என் குடும்பத்தினர், உறவினர்களெல்லாம் வந்து பார்த்தார்கள். அவர்களைக் கண்டதும் உடம்பு வலி சற்றுக் குறைந்தது போல் தோன்றியது. என் மகள்தான் கடைசியாக வந்தாள். அவள் ரொம்பவே நொந்து போய்விட்டாள்.

ஆஸ்பத்திரியில் நான் இருந்தபோது என் மீது என் கணவர் காட்டிய அக்கறை திருமண பந்தத்தின் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது. வேளை தவறாமல் உணவு, ஜுஸ் தந்து என் வேண்டுகோளுக்கிணங்க காற்றும் வெளிச்சமும் புகுமாறு எந்நேரமும் ஜன்னலைத் திறந்து வைத்து, கூப்பிட்ட நேரமெல்லாம் விரைந்து வந்து பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டார்.

நாங்கள் வாக்கிங் போகும்போது எதிரே வரும் நோயாளிகளைத் தினம் தினம் பார்த்ததில் கண்ணுக்குத் தெரியாத பந்தம் உருவாகியிருந்தது. மருத்துவமனையில் பல்வேறு விழாக்களும் கொண்டாடப்பட்டன. அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பதிலாக, இறைவனை வேண்டிக்கொண்டு உயிருக்காகத்தான் அவர்கள் கண்ணீர் விட்டனர். வாழ்வின் அருமை சாவின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்குத்தான் நன்கு புரியும்.

ஆசிரியர் தினத்தன்று டயட்டீசியன் மோகனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். நவீன காலத்தில் மார்பகப் புற்றுநோய் அநியாயத்துக்கு அதிகரித்துக்கொண்டிருப்பதால் என் மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை நான் ஏற்படுத்த வேண்டுமென்றார். புற்றுநோய் சம்பந்தமாகப் புத்தகம், கேசட் போன்றவற்றை எனக்குப் பரிசளித்துவிட்டு அவர் கிளம்பியபோது என் பாதை எனக்கு தெளிவானது. இனி என் பணி, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்ல; மாணவர்களை நோயிலிருந்து பாதுகாப்பதும்தான் என்று முடிவெடுத்தேன்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று கீமோக்கள், முப்பது முறை கதிரியக்கச் சிகிச்சைகள். என் மகள் ஒரு அம்மாவாக என்னுடன் துணைக்கு வந்தாள்.

ஆறு மாதம் சிகிச்சை முடிந்து கிராப் தலையுடன் என் வாழ்க்கை பழைய நீரோட்டத்தில் சங்கமித்துவிட்டது. அறிவியல் வளர்ச்சியால், புற்றுநோயும் குணமாகும் நோய்களின் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்துகொண்டிருக்கிறது. நாம் போராடவும் பொறுமையாக இருக்கவும் தீர்மானித்துவிட்டால் போதும்; வாழ்க்கை ஒரு நாள் நமக்கு மிக அழகாக விடியும்!

Leave a Reply