டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ராஜினாமா? ஆம் ஆத்மி தலைமை நெருக்கடியா?
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் பிரீமியம் பேருந்து விவகாரம் தொடர்பாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி தலைமையின் அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கோபால் ராய் உடல் நலக் குறைவு காரணமாகவே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ள போதிலும் பிரிமியம் பேருந்து விவகாரம்தான் இந்த ராஜினாவுக்கு காரணம் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் வகித்த போக்குவரத்து துறையை பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவனிப்பார் என கூறப்படுகிறது.
பிரீமியம் பேருந்து சேவை திட்டம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் விளக்குவதற்காக தானே நேரடியாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு செல்லவுள்ளதாக கோபால் ராய் கூறியிருந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.