அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் – டொனால்ட் டிரம்ப் போட்டி உறுதியானது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் வரும் நவம்பரில் புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் கடந்த சில மாதங்களாக 50 மாநிலங்களில் நடந்து வந்தன.
இந்த பிரைமரி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும் அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே வரும் அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் – டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய கருத்து கணிப்புகளின்படி, ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறப்பட்டு வந்த போதிலும் டொனால்ட் டிரம்ப் அவ்வளவு எளிதில் வெற்றியை விட்டுத்தர மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆயினும் ஹிலாரி கிளிண்டன் ஒருவேளை வெற்றிபெற்றால் 239 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாறில் அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்புக்குரியவராக உயர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.