மத்திய அமைச்சரவை மாற்றம் எப்போது? ராஜ்நாத் சிங் பதவியில் நீடிப்பாரா?
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. இந்நிலையில் மத்தியில் ஆட்சிமாற்றம் உருவாகி 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு இந்த முறை அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கவும் திறமை வாய்ந்தவர்களை அமைச்சராக நியமிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி ஆகியோரின் பொறுப்புகளில் மாற்றம் இருக்காது என கூறப்படாலும் ராஜ்நாத் சிங், உ.பி. மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் அதன் காரணமாக அவர் மத்திய அமைச்சரின் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதன் பின்னர் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் சீனாவின் சாங்காய் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். எனவே மோடி சீனா செல்லும் முன்னரோ அல்லது சீனா சென்றுவிட்டு திரும்பிய பின்னரோ மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.