பதவி நீட்டிப்பு வேண்டாம். கல்விப்பணிக்கு செல்கிறேன். ஆர்பிஐ கவர்னர் ரகுராம்ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல முன்னணி அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் சுப்பிரமணியன்சுவாமி உள்பட ஒருசிலர் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் மீண்டும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றும் ஓய்வுக்கு பின்னர் கல்விப்பணிக்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகுராம்ராஜன் தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
நான் கல்விப்புலத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பிரதேசம் பொருளாதார சிந்தனைகள் குறித்த கல்விப்புலம் சார்ந்ததே என்பதை நான் எப்போதும் ஏற்கெனவே பிரதானப்படுத்தி வந்திருக்கிறேன்.
என்னுடைய 3 ஆண்டுகால பதவி முடிவை நோக்கி செல்கையில், சிகாகோ பல்கலைக் கழகத்தில் என்னுடைய பொறுப்பு ஆகியவற்றினால் நாம் எவ்வளவு சாதித்துள்ளோம் என்பது குறித்து சிந்திக்க அவகாசம் கிடைத்துள்ளது. முதல்நாளன்று நாம் என்ன திட்டமிட்டிருந்தோமோ அது நடந்தேறியுள்ளது. அதற்கு அடுத்தபடியான மேம்பாடுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை.
பணவீக்கம் இலக்குப் பிரதேசத்தில் உள்ளது. ஆனால் பணக்கொள்கை குழு இன்னும் அமைக்கப்படவில்லை. சொத்து தர சீராய்வின் கீழ் வங்கிகள் குறித்த சீர்த்திருத்தங்கள் வங்கிகளின் இருப்பு நிலை குறிப்பு மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. ஆனால் இது இன்னும் நிறைவடைந்து விடவில்லை. சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் குறுகிய கால அளவில் சில இடர்பாடுகளை அளித்தது.
வளர்ச்சித் திட்டங்கள் சரியாக நிறைவேறுவதை திறந்த மனதுடன் எதிர்நோக்கும் நான், சரியான சிந்தனைக்குப் பிறகு அரசுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு எனது பதவிக்காலம் முடிந்த பிறகு நான் மீண்டும் கல்விப்புலத்திற்கு திரும்புகிறேன் என்ற விவரத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் நாட்டுக்காக சேவை செய்ய எந்த நேரமும் நான் காத்திருக்கிறேன்.
ஆர்பிஐ குடும்பத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் உங்களது அர்ப்பணிப்பு மிக்க பணிக்காகவும் உங்களது தடையற்ற ஆதரவுக்காகவும் நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றியது ஒரு அருமையான பயணம்!
இவ்வாறு கூறியுள்ளார் ரகுராம் ராஜன்.