கச்சத்தீவு விஷயத்தில் அதிமுக, திமுக இருதரப்பிலும் தவறு உள்ளது. பாமக ராம்தாஸ்

கச்சத்தீவு விஷயத்தில் அதிமுக, திமுக இருதரப்பிலும் தவறு உள்ளது. பாமக ராம்தாஸ்
ramdoss
நேற்று முதல் தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை இழந்ததற்கு யார் காரணம் என்றும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பது யார்? என்றும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும் கச்சத்தீவை மீட்க அவர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அதிமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் திமுக தரப்பு இதை மறுத்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவு குறித்த வாத, எதிர்வாதங்களும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கச்சத்தீவு கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் தாரை வார்க்கப்பட்டது என்பதும், கச்சத்தீவை மீட்கும் வரை ஓய மாட்டேன் என்று 15.08.1991 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய ஜெயலலிதா அதற்காக இதுவரை துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பதும் ஊரறிந்த உண்மை. இரு தரப்பின் மீதும் தவறு உள்ள நிலையில், அவை மறைத்துவிட்டு எதிர்தரப்பினர் மீது மட்டும் புகார்களைக் கூறி அவை நடவடிக்கைகளை முடக்குவது ஆரோக்கியமான செயலாக இருக்க முடியாது.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகளுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, அதிமுகவும், திமுகவும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருந்து மிகப்பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடமை உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் நடந்த சில அரசியல் நாகரீகம் நிறைந்த சில நிகழ்வுகள் தமிழக அரசியலில் நாகரீகம் துளிர் விடுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அதிமுகவும், திமுகவும் இருக்கும் வரை தமிழக அரசியலில் நாகரீகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற யதார்த்தத்தை சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் நிரூபித்து விட்டன. 1989ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் தொடங்கிய அரசியல் அநாகரீகம் இன்றளவும் தொடர்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் ஓரளவாவது அவை நாகரீகம் இருக்கும். ஆனால், அதை செய்வதற்கு கூட தமிழகத்தை ஆளும்கட்சி முன்வராதது துரதிருஷ்டவசமானதாகும்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சி அமைந்திருப்பதால் சட்டப்பேரவையில் ஜனநாயகம் தழைக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால்,  கலைஞருக்கு முன்வரிசையில் இடம், கலைஞரின் பெயரை யாரும் குறிப்பிடக்கூடாது உள்ளிட்டவற்றை தவிர வேறு பிரச்னைகளே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை தான் சட்டப்பேரவை நிகழ்வுகள் காட்டுகின்றன. வழக்கமாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி ஆவேசமாக செயல்பட்டாலும், ஆளுங்கட்சி அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும்  தங்களின் செயல்திட்டத்தை நிலைநாட்டுவதிலேயே தீவிரமாக இருப்பதால் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இது தமிழக நலனுக்கு நல்லது அல்ல. கலைஞரை கருணாநிதி என்று அழைப்பதற்காக அதிமுகவை மக்கள் ஆளுங்கட்சியாக்கவில்லை. அதேபோல், கலைஞரின் பெயர் உரிமைக்கு போராடுவதற்காக திமுகவை எதிர்க்கட்சியாக்கவில்லை. மக்களின் பிரச்னைகளை பேசுவதற்காகத் தான் இரு கட்சிகளுக்கு இந்த பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ளனர். 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் விலைபோகாத படித்த வாக்காளர்கள் சட்டமன்ற நிகழ்வுகளை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். எனவே, அவை நாகரீகத்தை காத்து, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து இரு கட்சிகளும் அவையில் விவாதிக்க முன்வர வேண்டும்”

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply