மனசெல்லாம் மந்திரம்!

மனசெல்லாம் மந்திரம்!

p8aபிள்ளை வரம் தருவான் கண்ணன்!
வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந் தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்துக் கனவு காண்பது இயற்கையே! அந்தக் கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய் தந்தையர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வேத சாஸ்திரங்களும் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன.

மனிதன் தன்னுடைய கர்மவினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். சாஸ்திரங்களில், ‘பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ர:’ தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதால், புத்திரன் என்று கூறுகிறார்கள். ஜாதகத்தில் புத்திரபாவம் என்பது புத்திரன் – ஆண்பிள்ளை என்று குறிப்பிட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் ஆண், பெண் இரண்டும் வேண்டும் என்கிறது.

ஒரு ஜாதகத்தில் 5-ம் பாவமானது பூர்வ புண்ணியம் மற்றும் பிள்ளைச் செல்வம் போன்றவற்றைக் காட்டும் பாவமாகிறது. பூர்வ புண்ணியத்தையும் புத்திரபாக்கியத்தையும் ஒரே இடத்தில் வைத்த மகரிஷிகளின் மகிமை உயர்ந்தது.

ராசி மண்டலத்தை காலபுருஷனாகக் கொண்டால், அதன் 5-ம் பாவமாக அமைவது சிம்மம். அதன் அதிபதி சூரியன். மேலும், சூரியனே தந்தைக்குக் காரகம் வகிக்கிறார். பூர்வ புண்ணியம் இருந்தால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தைச் செல்வம் பெற நல்ல பாக்கியம் செய்திருக்கவேண்டும். பாக்கிய ஸ்தானத்தைக் குறிப்பிடுவது 9-ம் பாவமான தனுசு ஆகும். அதன் அதிபதி குரு புத்திரகாரகர். 5-ம் பாவத்துக்கு 5-ம் இடமாக இருப்பது 9-ம் பாவம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஒருவருக்கு நல்ல புத்திர பாக்கியம் அமைய 5-ம் பாவமும் 9-ம் பாவமும் முக்கியத்துவம் பெறுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின்படி ரிஷ்யசிருங்கரை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் குழந்தை பாக்கியம் கிட்ட, வழிபடுவதற்கு உகந்த மந்திரம் சந்தான கோபால மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிப்பதற்கு முன்பாக தக்க ஜோதிடரிடம் சென்று கணவன் – மனைவி இருவரின் ஜாதகத்தையும் காட்டி, 5-ம் பாவம் மற்றும் 9-ம் பாவம் ஆகியவற்றின் நிலையை பரிசீலித்து அதற்கு ஏற்றபடி மந்திரத்தை ஜபிக்கவேண்டும்.

சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

மந்திரத்தின் ரிஷி: நாரதர்
சந்தஸ்: அனுஷ்டுப்

முதல் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்
தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:

பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

மற்றொரு மந்திரம்

தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

எல்லா மந்திரங்களையும் போலவே இந்த மந்திரத்தையும் முறைப்படி உபதேசம் பெற்று, பூர்வாங்க பூஜைகளுடன் சமுத்திரத்தில் மூழ்கிப் போன பிராமணரின் நூறு குழந்தைகளை மீட்பதற்காக அர்ஜுனனின் தேரை ஓட்டிச் செல்லும் கோலத்தில் இருப்பவனாக பகவான் கிருஷ்ணரை தியானித்து, இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜபித்து, தேன், நெய், கல்கண்டு ஆகிய திரிமதுர திரவியத்தால் 10,000 முறை ஹோமம் செய்யவேண்டும்.

மேலும், சந்தான கோபால க்ருதம் எனப்படும் ஆயுர்வேத நெய்யை தர்ப்பையால் தொட்டுக்கொண்டு, தினமும் 108 முறை ஒரு மண்டல காலத்துக்கு மேற்சொன்ன மந்திரத்தை ஜபித்து, ‘ஆலிலையில் சயனித்து, தன் தாமரைப் பாதத்தின் கட்டை விரலை, தாமரை போன்ற கையால் எடுத்து, கொவ்வைச் செவ்வாயில் வைத்துச் சுவைத்தபடி இருக்கும் வட ஆலிலை பாலமுகுந்தனை நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்’ என்று தியானித்தபடி உட்கொண்டால் சந்தான பிராப்தி உண்டாகும்.

குழந்தை பாக்கியம் அருளும் துதிப்பாடல்

பண்ணார் பாடல் மகிழ்ந்து பரிசீவான்
பெண்ணார் மேனிப் பெருமான் பிறைசூடி
கண்ணார் நெற்றிக் கடவுள் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே

கருக் காத்து உருக் கொடுக்கும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை சமேத திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருவடியைப் போற்றி, திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தின் இந்தப் பாடலை பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால், ஈசன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்’ என்ற ஊர். இங்கு அழகான கிருஷ்ணர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் இங்கு அமைந்துள்ளதாலேயே, அந்த ஊருக்கு கிருஷ்ணன் கோவில் என பெயர் வந்தது. இங்கு உள்ள மூலவர் ‘பாலகிருஷ்ணன்’ குழந்தை வடிவில் நின்றபடி காட்சி அளிக்கிறார். அவர் தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துள்ளார். கிழக்கு பார்த்த வண்ணம் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இவரை தம்பதி சமேதராக வந்து தரிசித்து வேண்டிக் கொண்டால் மழலை பாக்கியம் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப்பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப்பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் உள்ளது தொட்டமளூர். இங்குள்ள திருக்கோயிலில் நவநீத கிருஷ்ணன் தவழும் நிலையில் குடிகொண்டிருக்கும் சந்நிதி தனியாக உள்ளது. இப்படிப்பட்ட அமைப்பில் வேறு எங்கும் விக்கிரகம் இல்லை என்கின்றனர். ‘குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டினால், குழந்தை பாக்கியம் நிச்சயம்!’ என்பது பக்தர்களது நம்பிக்கை.

உடுப்பியில் அமைந்துள்ள கிருஷ்ணர் விக்கிரகம் சாளக்கிராமத்தினால் ஆனது. துவாரகையில் ருக்மிணிதேவியால் பூஜிக்கப்பட்ட இந்த விக்கிரகம் மத்வாச்சார்யரால் உடுப்பியில் பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து வேண்டிக் கொண்டால் விரைவிலேயே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

Leave a Reply