வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனத்துக்கு எஸ்பிஐ நிதி உதவி: டச்சு அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
வெடிகுண்டு தயாரிப்புக்கு நிதி உதவி அளித்த நிறுவனங்கள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியும் இடம்பெற்றுள்ளது. வெட்கப்பட வேண்டிய நிறுவனங்கள் என 158 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் களை டச்சு விழிப்புணர்வு இயக்க மான பாக்ஸ் பட்டியலிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான டாலர்களை கொத்து வெடிகுண்டு என்றழைக்கப் படும் கிளஸ்டர் பாம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனாக வழங்கி யுள்ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
மொத்தம் 275 பக்க அறிக்கையை பாக்ஸ் வெளியிட் டுள்ளது. அதில் கொத்து வெடிகுண்டு தயாரிப்பு, அதை இருப்பில் வைப்பது, வேறிடங்களுக்குக் கொண்டு செல்வது ஆகிய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு இந்த அமைப்பு கொண்டு வந்த தீர்மானத்தில் 94 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. கொத்து வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான தடை 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரையான காலத்தில் நிதி நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளதாக பாக்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இதில் முதலீடு செய்துள்ள நாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் அனைத்தும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக் காவைச் சேர்ந்த 74 வங்கிகள், சீனாவைச் சேர்ந்த 29 வங்கிகள், தென் கொரியாவிலிருந்து 26 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா விலிருந்து ஒரே ஒரு வங்கியாக எஸ்பிஐ இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்பிடல் ஏடிகே எனும் நிறுவனத் துக்கு எஸ்பிஐ நிதி உதவி அளித்துள்ளது..
2012-ம் ஆண்டு ஜூன் வரை எஸ்பிஐ இதுபோன்ற நிறுவனங் களுக்கு 8.7 கோடி டாலர் அளவுக்கு கடன் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ செய்தித் தொடர்பாளரிடம் தொடர்பு கொண்ட போது, ஆர்பிடல் ஏடிகே இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சர்வதேச வங்கிகளான வெல்ஸ் பார்கோ செக்யூரிட்டீஸ் எல்எல்சி, பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச், சிட்டி குரூப் ஜேபி மார்கன், பாங்க் ஆப் டோக்கியோ மிட்சுபிஷி, சன் டிரஸ்ட் ராபின்சன் ஹப்ரே ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
2014-ம் ஆண்டு இந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் 151 நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தப் பட்டியலில் இருந்த 112 நிறுவனங்கள் புதிய பட்டியலிலும் உள்ளன. முந்தைய பட்டியலில் இடம்பெற்றிருந்த 34 நிறுவனங்கள் இதில் இடம்பெறவில்லை.
மொத்தமுள்ள 158 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 2,800 கோடி டாலர் வரை 7 கொத்து வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங் களுக்கு அளித்துள்ளன. சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண் டஸ்ட்ரி (சீனா), சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (சீனா), ஹன்வாஹ் (தென் கொரியா), நோரின்கோ (சீனா), ஆர்பிடல் ஏடிகே (அமெரிக்கா), பூங்ஸன் (தென் கொரியா), டெக்ஸ்ட்ரான் (அமெரிக்கா) ஆகியவற்றில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிதி நிறுவனங்கள் 630 கோடி டாலரும், வங்கிகள் 910 கோடி டாலரும் கடனாக வழங்கியுள்ளன.
158 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 2,800 கோடி டாலர் வரை 7 கொத்து வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளன.