ஐதராபாத் நிஜாம் டெபாசிட் செய்த ரூ.310 கோடி யாருக்கு சொந்தம். 67 வருடங்களாக நடந்து வரும் வழக்கு
தற்போதைய தெலுங்கானா மாநிலம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஐதராபாத் நிஜாமின் தனி ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தபோது ஐதராபாத் நிஜாம் தனது பகுதியை பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சி செய்தார். ஆனால் சர்தார் வல்லாபாய் பட்டேல் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி இந்தியாவுடன் இணைத்தார்.
இந்நிலையில் அப்போது ஐதராபாத் நிஜாமாக இருந்த மீர்உஸ்மான்அலி 1 மில்லியன் பவுண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.9 கோடியே 90 லட்சம் பணத்தை இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதர் ரகிமத்துலாவிடம் வழங்கினார். இந்த பணத்தை பின்னர் தருமாறு அவர் கூறியிருந்தார். ஆனால் ரகிமத்துலா அந்த பணத்தை இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் வங்கியில் டெபாசிட் தனது பெயரில் டெபாசிட் செய்தார். அடுத்த ஆண்டு மீர்உஸ்மான்அலி அந்த பணத்தை தனக்கு தரும்படி இங்கிலாந்து வங்கியிடம் விண்ணப்பித்தார். ஆனால் ரகிமத்துலா பெயரில் அந்த பணம் இருந்ததால் வங்கி மீர்உஸ்மான்அலிக்கு அந்த பணத்தை தர மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்தியா இதில் தலையிட்டது. அந்த பணம் மீர்உஸ்மான்அலிக்கு சொந்தமானது அல்ல. இந்தியாவுடன் இணைந்த ஐதராபாத்துக்குத்தான் சொந்தம். எனவே அந்த பணத்தை இந்தியாவுக்கு தான் தரவேண்டும் என்று கேட்டது. இதுபற்றி அறிந்ததும் பாகிஸ்தானும் அந்த பணத்துக்கு சொந்தம் கொண்டாடியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
தற்போது இந்த பணத்துக்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐதராபாத் நிஜாமின் வாரிசு ஆகியோர் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் 67 வருடமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய மதிப்பிற்கு டெபாசிட் செய்த பணம் வட்டியோடு சேர்ந்து ரூ.310 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. முன்னதாக இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பாகிஸ்தான் இந்த பணத்துக்கு உரிமை கொண்டாட எந்த தகுதியும் இல்லை. எனவே வழக்கில் இருந்து பாகிஸ்தானை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி கெண்டர்சன் இந்தியாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்துவிட்டார். அவர் இதுபற்றி கூறும்போது, பாகிஸ்தானுக்கும் இதில் உரிமை கொண்டாட தகுதிகள் உள்ளன. இது சம்மந்தமாக கோர்ட்டு முழு விசாரணை நடத்தி தான் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று கூறினார்.
இதேபோல பாகிஸ்தானும் இந்தியாவை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கூறியிருந்தது. அதையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்று நீதிபதி கூறியிருக்கிறார்.