ஆளுங்கட்சியில் இணைகிறாரா எதிர்க்கட்சி தலைவர்? உ.பியில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரும் பகுஜன் கட்சியின் மூத்த உறுப்பினருமான சுவாமி பிரசாத் மெளரியா திடீரென கட்சியில் இருந்து விலகினார். இவர் விரைவில் ஆளுங்கட்சியில் இணைவார் என்றும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் உ.பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் சுவாமி பிரசாத் மெளரியா திடீரென பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ” மௌரியா நல்ல அரசியல்வாதிதான். ஆனால் அவர் இதுவரை இருந்த பகுஜன் சமாஜ் கட்சி மோசமானதாகும். அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக தற்போது அவர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. சமாஜவாதி கட்சிக்கு அவருடன் நல்லுறவு உள்ளது என்று கூறியுள்ளார்.
மெளரியா, சமாஜவாதி கட்சியில் இணையவுள்ளதாகவும், விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ள மாநில அமைச்சரவையில் இடம்பெற அவருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, “தாம் எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து மெளரியாதான் முடிவெடுக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் பதிலளித்தார்.