நான் செய்தது தவறுதான். அதற்காக வருந்துகிறேன். வைகோ
மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கி நின்றார். இந்நிலையில் நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை, தற்போது தவறு என கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு பேசிய வைகோ, “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை, தற்போது தவறு என கருதுகிறேன். அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு நான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபட்டதாக பல கட்சியினர் என்மீது குற்றம் சுமத்தினர்.
தேர்தலின் போது பலமான கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி அமையும் வரை ஊடகங்கள் உருவேற்றின. கூட்டணி அமைந்த பின்னர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. அந்த இருட்டடிப்பும், திமுக, அதிமுகவினரின் பண விநியோகமும் மதிமுக தோல்விக்குக் காரணமானது.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவோம்.
தேமுதிக, தமாகா கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து கவலை இல்லை. அது அவர்களது விருப்பம்’ என்று கூறினார்.