நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயற்சித்தாரா சோனியா காந்தி? சு.சுவாமியின் புது குண்டு
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உள்பட ஒருசில அதிகாரிகள் மீது புதுப்புது புகார்களை கூறி வந்தார். தற்போது அவரது கவனம் மீண்டும் காங்கிரஸ் பக்கம் போயுள்ளது. அதுவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை மீண்டும் அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த கடந்த 1975ஆம் ஆண்டு ‘மிசா’ என்னும் நெருக்கடிநிலை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினார். இந்த காலகட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை தடை செய்யப்பட்டிருந்தது. பத்திரிகை செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டன. அரசுக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் போலீசாரின் கண்களில் இருந்து தப்பித்து பிறமாநிலங்களில் தலைமறைவாக மாறுவேடத்தில் வாழ்ந்தனர்.இந்நிலையில் இந்திரா காந்தி ஆட்சியை இழந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் அவசரநிலையை இனிமேல் வேறு யாரும் பிரகடனம் செய்ய முடியாத அளவுக்கு சட்டதிருத்தம் கொண்டு வந்தனர்.
ஆனால் கடந்த 2011-12ஆம் ஆண்டில் மாமியார் இந்திரா காந்தியை போலவே மருமகள் சோனியா காந்தி நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்ததாகவும், ஆனால் அதனை கடைசி நேரத்தில் கைவிட்டதாகவும் இதுதொடர்பான முழு தகவல்களையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.