கலை அறிவியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வா? புதிய கல்விக்கொள்கையால் மாணவர்கள் அதிர்ச்சி
பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், மருத்துவ படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்று தமிழகம் உள்பட பல மாநிலங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில் விரைவில் அறிவிக்கவிருக்கும் புதிய கல்விக்கொள்கையில் கலை-அறிவியல் படிப்புகளுக்கே நுழைவுத்தேர்வு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கையை அமைக்க மத்திய அரசு முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் பணி, நாடு முழுவதும் பயணம் செய்து பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோர்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும். சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும், கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதாகவே இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது, இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மத்திய அரசு தான் கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும். அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் தான் மாநில அரசிற்கு இருக்கும். அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகாரம் நகைப்பிற்குரியதாகவும் மாறும். மாநில அரசால் வைக்கப்படும் தேர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போகும்.
குறிப்பாக 12ஆம் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அந்த மதிப்பெண்களுக்கு மதிப்பு இருக்காது. எந்த படிப்பில் சேர வேண்டுமென்றாலும், அதற்கான தனி தகுதி தேர்வு இருக்கும். அதில் வெற்றி பெற்றால் தான், மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்பில் சேர முடியும்” என்று அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் என்னதான் விடிய விடிய விழித்திருந்து படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும் பிரயோஜனம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.