சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 8 மாத குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்.

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 8 மாத குழந்தையை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்.

childஆந்திரவை சேர்ந்த ஏழை விவசாயி ரமணப்பா-சரஸ்வதி தம்பதியினரின் 8 மாத பெண் குழந்தைக்கு பிறவியிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அதாவது, கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு செல்லும் குழாய் இல்லை. இதற்கு ஒரே தீர்வு மாற்று கல்லீரல் பொருத்துவதுதான். ஆனால் அதற்கு ரூ.50 லட்சம் செலவாகும். இவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியாத இந்த ஏழை தம்பதியினர் தங்களது குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு, தம்பலபல்லி நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, கருணைக் கொலைக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றத் தேவையான அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஆந்திர மாநில அரசே ஏற்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தற்போது அந்த குழந்தை சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாதில் இருந்து விமானத்தில் குழந்தை மற்றும் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநில சுகாதாரத் துறை செயலாளரின் உதவியாளர் பிரசாத் நேற்று சென்னை வந்தார். குளோபல் மருத்துவமனைக்கு அவர்கள் காலை 11.15 மணிக்கு வந்தடைந்தனர். உறவினர்கள் சிலரும் உடன் வந்துள்ளனர். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து குளோபல் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

குழந்தைக்கு கல்லீரலைக் கொடுக்க பெற்றோர் இருவரும் முன்வந்துள்ளனர். இருவரும் ஒரே ரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருடைய கல்லீரலும் குழந்தைக்கு பொருந்தும். யாருடைய கல்லீரலைப் பொருத்துவது என்று முடிவு செய்யவில்லை. குழந்தையின் பாதிக்கப்பட்ட கல்லீரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு, தாய் அல்லது தந்தையிடம் இருந்து 20 சதவீத கல்லீரல் பகுதியை மட்டும் பெற்று குழந்தைக்கு வைக்கப்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. குழந்தைக்கு வைக்கப்பட்ட கல்லீரல் 2 வாரங்களில் முழு வளர்ச்சி அடைந்துவிடும். அதேபோல, தானம் கொடுத்தவரின் கல்லீரலும் வளர்ச்சி அடையும். அறுவை சிகிச்சையின்போதே குழந்தையின் கல்லீரல் பித்தப்பை இடையே குழாய் இணைக்கப்படும்.

அறுவை சிகிச்சைகளை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் முகமது ரேலா, டாக்டர் கோமதி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்ய உள்ளனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 6 முதல் 7 மணி நேரம் வரை நடைபெறும். தானமாகக் கொடுப்பவரிடம் இருந்து கல்லீரலை எடுப்பது, குழந்தைக்கு அதை பொருத்துவது என 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன. இதற்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும். மருத்துவச் செலவை ஆந்திர மாநில அரசு ஏற்கிறது.

இவ்வாறு குளோபல் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Leave a Reply