காந்தியின் கொள்கைக்கு எதிரானது மோடியின் “ஸ்மார்ட் சிட்டி’ திட்டம். அன்னா ஹசாரே
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம். இந்தியாவில் உள்ள 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்க வேண்டும் என்ற திட்டத்தில் முதல்கட்டமாக சென்னை, கோவை உள்பட 20 ஸ்மார்ட் சிட்டிகளில் பெயர்கள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான வேலையையும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் காந்தியின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்திற்கு எதிரானது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியின் முழுவிபரங்கள் பின்வருமாறு:
பொலிவுறு நகரம் திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன் புணேவில் தொடக்கி வைத்தபோது, நகர்மயத்தை பிரச்னையாகக் கருதாமல் வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். காந்தியைப் போல் மோடியும் குஜராத்தில் பிறந்தவர்தான். இப்போது மோடி சொல்வது (நகர வளர்ச்சி) சரியா? அல்லது காந்தி சொல்லியது (கிராம வளர்ச்சி) சரியா என்பதே என் கேள்வி.
இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். அதில், இயற்கையை அழித்து மேற்கொள்ளப்படும் நகர வளர்ச்சி நிலையானதாக இருக்காது என்றும், நகரங்களில் உற்பத்தியாகும் கரியமில வாயு காரணமாக நோய்கள் பெருகி மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்தால் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் பெருகுவதன் மூலம் கடலோர நகரங்களுக்கு அச்சுறுத்தல் எழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், நகர்மயத்தை வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருத வேண்டும் என மோடி கூறுவது எவ்விதம் சரியாகும்?
இவ்வாறு அன்னா ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.