வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் வெளியீடு:ஆகஸ்ட் 1-இல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி

வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் வெளியீடு:ஆகஸ்ட் 1-இல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி

tnpsc-vao-examகிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த முடிவுகளை தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 813 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 2-இல் நடைபெற்றது. அதில், 7 லட்சத்து 70 ஆயிரத்து 860 பேர் பங்கேற்றனர். அவர்களில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 42 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகிய விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை பதிந்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித் தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு:

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விரைவில் வெளியிடப்படும். இந்தப் பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் முடக்கம்: லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதிய காரணத்தால், தேர்வு முடிவுகளை அறிவதில் தேர்வர்கள் ஆர்வம் காட்டினர்.

இதனால், வெள்ளிக்கிழமை, தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்கு தேர்வாணைய இணையதளம் முடங்கியது. இந்தக் காரணத்தால், தேர்வு முடிவுகளை உடனடியாகத் அறிந்து கொள்ள முடியாத நிலை தேர்வர்களுக்கு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

Leave a Reply