நிதியமைச்சர் ஆனதும் 8 கோடி ரூபாயை இழந்த அருண்ஜெட்லி
பொதுவாக அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் வருடா வருடம் சொத்துக்களின் மதிப்பு அதிகரித்து கொண்டே பார்த்துள்ளோம். அதுவும் கோடிகளில்தான் அதிகரிக்கும். சாதாரண கவுன்சிலரின் சொத்து மதிப்புகூட நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சரின் சொத்துக்கள் குறைந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாக சொத்துக்களின் மதிப்பு குறைந்து வரும் அரசியல்வாதி இவர் ஒருவராகத்தான் இந்தியாவில் இருப்பார் என கருதப்படுகிறது.
சமீபத்தில் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொத்துக்களின் மதிப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொத்துக்களின் மதிப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். முதல் ஆளாக தனது சொத்துக்களின் பட்டியலை வெளியிட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதில், தனது சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.67.1 கோடியாக இருந்துள்ளது. தற்போது அது ரூ.60.99 கோடியாக குறைந்துள்ளது. அதாவது 8.9 சதவீதம் அவரது சொத்து மதிப்பு சரிவு கண்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு ரூ.3.52 கோடியும், 2016 ம் ஆண்டு ஒரு கோடி ரூபாயும் குறைந்துள்ளது. நிதியமைச்சர் ஆனதும் கிட்டத்தட்ட ரூ.8 கோடியை அவர் இழந்துள்ளார்.
அருண் ஜெட்லிக்கு டெல்லி, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் சொத்துக்கள் உள்ளன. அருண் ஜெட்லி, எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் இன்வெஸ்ட் செய்யவில்லை. இம்ப்ரோ எண்ணெய் நிறுவனத்தில் 16 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஹெச்.டி.எப்.சி மற்றும் ஸ்டேட் வங்கியில் அவருக்கு சேமிப்பு கணக்கு உள்ளது.
அருண் ஜெட்லி, சொந்தமாக 2 மெர்சிடெஸ் கார்களை வைத்துள்ளார். ஒரு டொயாட்டோ ஃபார்ச்சூனர், ஹோண்டா அக்கார்ட் கார்களையும் வைத்திருக்கிறார். கடந்த நிதியாண்டில் அவரிடம் பிஎம்டபிள்யூ கார் இருந்தது. இந்த நிதியாண்டில் அதனை விற்று விட்டார். இவருடன் சேர்த்து,13 அமைச்சர்கள் தங்களது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மேனகா காந்தி ஆகியோர் இன்னும் தங்கள் சொத்துப்பட்டியலை வெளியிடவில்லை என தெரிகிறது.