வெற்றிகரமான நிதித் திட்டமிடலுக்கு 10 யோசனைகள்!

வெற்றிகரமான நிதித் திட்டமிடலுக்கு 10 யோசனைகள்!

நிதித் திட்டமிடலின் அவசியம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் பெரும்பாலானவர்கள் திண்டாடுகிறார்கள். பொதுவாக, நிதித் திட்டமிட எண்ணற்ற திட்டங்கள் இருந்தாலும், மிக எளிதாக அறிந்துகொள்ளச் சில வழிகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

காப்பீடுகள்!

*ஆயுள் காப்பீடு:

ஒரு தனிநபர், தான் ஈட்டும் வருட வருமானத்தைப்போல் குறைந்தபட்சம் 10 மடங்குக்கு எடுக்க வேண்டும். இதைவிட அதிகமாக எடுப்பது அவரவர் நிதி நிலை மற்றும் தேவை, இலக்கு, கடன்களைச் சார்ந்தது. ஆயுள் காப்பீடு எடுக்கும்போது முதலில் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதே நல்லது. குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தருவது டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பதால், முதல் மரியாதை டேர்ம் இன்ஷூரன்ஸுக்கே தரவேண்டும்.

* தனிநபர் விபத்து காப்பீடு:

ஒரு தனிநபர், தான் வாங்கும் அடிப்படை சம்பளத்தைப் போல் 72 மடங்கு, தனிநபர் காப்பீடு எடுத்துக் வைக்கலாம். உதாரணமாக ஒருவரது மாத சம்பளம் ரூ.6,000 என்று வைத்துக் கொள்வோம். இவர் எடுக்க வேண்டிய தனிநபர் விபத்து காப்பீட்டு அளவானது ரூ.4,32,000 (6000×6) ஆகும்.

* மருத்துவக் காப்பீடு:

ஒரு தனிநபர், தன் குடும்பம் முழுவதற்கும் சேர்த்து, குறைந்தது ரூ.3 லட்சத்துக்காகவாவதுமருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். திடீர் திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க இந்த மருத்துவக் காப்பீடு மிக அவசியம்.

வருமானத்தில் எவ்வளவு முதலீடு!

ஒருவர் தன் வருமானத்திலிருந்து குறைந்தது 30 சதவிகித தொகையைத் தன் வருங்காலத்துக்குச் சேமித்து வைக்க வேண்டும். இதில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்கிறார்கள் என்றால் குறைந்தது 60 சதவிகிதத்தை தங்கள் வருமானத்திலிருந்து சேமித்து வைக்க வேண்டும்.

பங்கு, ஃபண்டு முதலீடு!

இன்றைக்கு இளைஞர்கள் பலரும் ரிஸ்க் எடுக்கத் தயங்கி, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை சேர்த்து வைக்கிறார்கள். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இந்த இரண்டு அணுகுமுறையுமே தவறு. இளைஞர்கள் ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே சரி. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கி, ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை போடுவதே சரி.

ஒருவர் பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைக் கண்டறிய ஒரு சுலபமான விதிமுறை உள்ளது. அதாவது, 100-லிருந்து உங்கள் வயதைக் கழித்தபின் கிடைக்கும் விடையே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அளவாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் வயது 35. 100-லிருந்து 35-யைக் கழித்தால், கிடைப்பது 65. அதாவது, 35 வயது உள்ளவர்கள் தங்களுடைய முதலீட்டுத் தொகையில் 65 சதவிகிதத்தைப் பங்கு, பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த 65 சத விகிதத்தை நேரடியாக பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. 50 சதவிகிதத்தை நேரடியாக பங்கு களில் முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள 15 சதவிகிதத்தை ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஓய்வூதிய முதலீடு!

ஒருவர் ஓய்வூதியத் துக்காகக் குறைந்தது எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கலாம். ஒருவர் தனது ஓய்வுக்காலத்துக்காகத் தனது ஆண்டு வருமானத்தைப் போலச் சுமார் 20 மடங்கு தொகை வரும் அளவு முதலீட்டுத் தொகுப்பை (கார்பஸ்) உருவாக்கி கொள்ள வேண்டும்.

ஒருவரது ஆண்டு வருமானம் உயருவதற்கேற்ப ஓய்வூதியத்துக்காக சேர்க்கும் தொகையையும் உயர்த்திக் கொள்வது அவசியம். இந்த வகையில் திட்டமிட்டாலே ஒருவர் தன் ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிக்க முடியும்.

வீட்டுக் கடன் எவ்வளவு வாங்க வேண்டும்?

வீட்டுக் கடன் என்பது குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி ஈட்டும் ஆண்டு மொத்த வருமானத்தில் 6 அல்லது 8 மடங்குக்கு மிகாமல் இருப்பது நல்லது. உதாரணமாக, 30 வயது நிரம்பிய கணவனின் ஆண்டு வருமானம் ரூ.3,60,000. ஏறக்குறைய அதே வயதுடைய மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.2,40,000. மொத்தம் ரூ.6,00,000. இவர்கள் ரூ.36 லட்சம் அல்லது ரூ.48 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வீட்டுக் கடன் வாங்கலாம்.

40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இந்த ஃபார்முலா பொருந்தாது. அவர்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் வீட்டுக் கடனை கட்டி முடிக்கிற அளவுக்கு வீட்டுக் கடனை பெறுவதே சரி.

கடன் மாதத் தவணை!

எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டு, வாங்குகிற சம்பளத்தில் முக்கால்வாசியை திரும்பக் கட்டுகிறார்கள் சிலர். இது தவறு. ஒருவர், தான் சம்பாதிக்கும் மாத சம்பளத்தில் 35 சதவிகிதத்துக்கு மிகாமல் கடன் இஎம்ஐ தொகை இருக்க வேண்டும்.
இதற்குமேல் மாதத் தவணை செலுத்துபவர்கள், எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டுக்கு வழியில்லாமல் இருப்பார்கள். இவர்கள் சின்ன பிரச்னை வந்தால்கூட, நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

முதலீட்டு வருமானம்!

பணவீக்கம் என்பது ஆண்டுக்கு 8% என்று கூட்டு வட்டி அடிப்படையில் உயர்கிற மாதிரி, ஒருவர் செய்யும் முதலீடும் கூட்டு வட்டி அடிப்படையில் வருடத்துக்கு குறைந்தபட்சம் 10% என்கிற அளவில் வளர்கிற மாதிரியான முதலீட்டில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, உங்கள் முதலீடு பணவீக்கத்தைத் தாண்டி வளர்ச்சி அடையும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடு எப்போது 2 மடங்காகும்?

ஒருவர் செய்யும் முதலீடு எத்தனை வருடத்தில் இரண்டு மடங்காக ஆகும் என்பதை சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். இதற்கான விதிமுறை 72/ எதிர்பார்க்கும் வட்டி விகிதம் (அதாவது, 72-யை நமக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை வகுத்தால் நமக்கு விடை கிடைக்கும்). உதாரணமாக, ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் 8% என்றால், 72/8 = 9 வருடத்தில் முதலீடு இரண்டு மடங்காக உயரும். அதாவது, ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், 9 வருடம் கழித்து ரூ.2 லட்சமாக அது உயரும்.

வங்கியில் சேமிக்கும் நிரந்தர வைப்பு நிதி திட்டத்துக்குத் தற்போது 8% வட்டி வழங்கப் படுகிறது. அதாவது, ரூ.10,000 வைப்பு நிதியில் சேமித்தால், அது 9 வருடத்தில் இரு மடங்காகி ரூ.20,000-ஆக வளரும். எனவே, வங்கி வட்டி வருமானத்தைவிட அதிக வருமானம் தருகிற பாதுகாப்பான, அரசு அங்கீகாரம் பெற்ற, தொடர்ந்து கண்காணிக்கக்கூடிய வகையில் உள்ள முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.

மதிப்பை அதிகரிக்கும் பணவீக்க விகிதம்!

வருங்காலத்தில் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாங்கும் திறனை கணக்கிடக் கற்றுக்கொள்வது அவசியம். விலைவாசி ஏற்றம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனையும் எதிர்கொள்ள நாம் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, இன்று ரூ.100-க்கு வாங்கும் பொருளின் மதிப்பு, ஆண்டுக்கு 10% பணவீக்க விகிதம் என்றால், 7 வருடத்தில் ரூ.200-ஆக இருக்கும். 12% பணவீக்கம் எனில், 70/12 = 5.8 வருடத்தில் ரூ.200-ஆக உயரும். இன்றைக்கு செய்யும் செலவு எதிர்காலத்தில் எவ்வளவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு சரியாக நிர்ணயம் செய்ய முடிந்தால்தான், இப்போதிருந்தே அதற்காக முதலீடு செய்ய முடியும்.

கூட்டு வட்டியின் அதிசயம்!

கூட்டு வட்டியில் வளர்ச்சி அடையக்கூடிய முதலீட்டுத் திட்டத்தை ஒரு வருடத்துக்கு மேல் முதலீடுசெய்து, அந்த முதலீடானது நிலையாக இருக்கும்பட்சத்தில், அதாவது 3, 5, 10, 15, 20, 25, 30, 40, 50 என பல ஆண்டுகளுக்கும் இருக்குமாறு முதலீடு செய்தால், அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் வியக்க வைக்கும். உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லப்படக்கூடிய கூட்டு வட்டி வளர்ச்சி மூலம் ரூ.10,000 முதலீடு தரும் முதிர்வுத் தொகையை கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்!

p59a

Leave a Reply