ஜிப்மரில் முதலாம் ஆண்டு மருத்துவ வகுப்புகள் தொடக்கம்

ஜிப்மரில் முதலாம் ஆண்டு மருத்துவ வகுப்புகள் தொடக்கம்

jipmerஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200, எம்பிபிஎஸ் (மருத்துவப்படிப்பு) மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை ஜிப்மர் முதலாமாண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு 150 இடங்களும், காரைக்கால் வளாகத்தில் 50 இடங்களும் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. புதுச்சேரியில் உள்ள 150 இடங்களில்

40-ம், காரைக்காலில் உள்ள 50 இடங்களில் 14-ம் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 முதல் 22ஆம் தேதி வரை நடந்தது. சேர்க்கை கடிதம் 29-ம் தேதி வழங்கப்பட்டது. 200 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியருக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் 6 வார கால அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் டாக்டர் எஸ்.ஜி. பரிஜா வகுப்புகளை தொடங்கி வைத்துப் பேசியது:

நாட்டின் தலைசிறந்த 5 மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ள ஜிப்மரில் படிக்க மாணவ, மாணவியருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு அரியதாகும். ஜிப்மர் வரலாற்றில் நடப்பாண்டு மிக முக்கியமான நாளாகும். ஜிப்மர் காரைக்கால் மருத்துவக் கல்லூரி இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி-காரைக்கால் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது ஒருங்கிணைந்த 6 வார கால அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் அவர்களுக்கு தனித் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகளிடம் உள்ளூர் மொழியான தமிழில் பேசி கனிவாக அணுகுவது, ஆங்கில மருத்துவ தொழில்நுட்ப வார்த்தைகளை பயன்படுத்துவது, அடிப்படை மருத்துவத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும்.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பழைய மாணவர்களாலும் பெருமை பெற்று விளங்குகிறது. இங்கு படித்தவர்கள் தலை சிறந்த மருத்துவர்களாக உருவாகி உள்ளனர் என்றார் பரிஜா.

கண்காணிப்பாளர் பாலச்சந்தர், டீன்கள் மகாதேவன், டாக்டர் பட், மாணவர் சேர்க்கை அமைப்பாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் காதம்பரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர்கள்-பெற்றோர் தர்னா

ஏனாமைச் சேர்ந்த மாணவி நக்கல ரேஷ்மா, மாஹேவைச் சேர்ந்த மாணவன் ராகுல் பிரதீப், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவன் பி.ஸ்ராவந்த் கிருஷ்ணா மற்றும் யது நந்தன், செளம்யா ஆகியோர், ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி புதுச்சேரி ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு புதுச்சேரி மாநிலத்துக்கான ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்த கலையரங்கம் முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெற்றோர்கள் கூறியது: நாங்கள் புதுச்சேரியில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். புதுவையில் பல்வேறு அரசுத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால் புதுவையில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான விதிமுறைகளை காண்பித்து எங்கள் குழந்தைகளுக்கும் இடம் தரவில்லை எனத் தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து இயக்குநர் பரிஜா கூறியது: இப்பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால் விரிவாகப் பேச முடியாது. தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் ஜிப்மரில் இடம் வழங்கப்படும். இதுகுறித்து சட்ட நிபுணர்களின் கருத்தறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாணவர்-பெற்றோர் தர்னா போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply