திருவண்ணாமலை கிரிவலப்பாதை விவகாரம். தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பசுமை தீர்ப்பாயம்
பக்தர்கள் மனமுருகி வழிபடும் அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் கிரிவலம் வருவது பக்தர்களின் வழக்கமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் திட்டத்துடன் அப்பாதையில் உள்ள மரங்களை வெட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனிதச்சங்கிலி உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிரிவலப்பாதையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதிபதி டாக்டர் ஜோதிமணி, தொழில்நுட்ப வல்லுநர் பி.எஸ்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கிரிவலப் பாதையை அகலப்படுத்த, மரங்களில் கிளைகள் வெட்டவோ, வேரோடு வெட்டி அழிக்கவோ தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், தமிழக வனத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
மேலும், எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன, மரங்கள் வெட்ட அனுமதி கொடுத்தது யார், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜூலை 20-ஆம் தேதிக்குள் பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜூலை 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.