பலமாடி கட்டிடத்தில் இருந்து நாயை தூக்கி எறிந்த கொடூரன் ஒரு மருத்துவ மாணவனா? அதிர்ச்சி தகவல்
நேற்று சமூக வலைத்தளத்தில் பரவிய ஒரு வீடியோ பார்ப்போரை பதற வைக்கும் அளவுக்கு இருந்தது. ஒரு இளைஞர் கையில் வைத்திருந்த ஒரு நாயை பலமாடி கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசியெறிகிறார். அந்த நாய் தரையில் விழுந்து பரிதாபமாக செத்தது. இந்த வீடியோவை கண்ட பலர் அந்த இளைஞருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நாயை தூக்கி எறிந்த இளைஞரையும், இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்தவரையும் கைது செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நாயை கொன்ற நபர் குறித்து துப்பு கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அளிப்பதாக ‘ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல்’ என்ற விலங்குகள் நல அமைப்பு அறிவிப்பு செய்தது. இதனிடையே சென்னை போலீஸ் கமிஷனரிடம், விலங்குகள் நல ஆர்வலர் ஸ்வரன் கிருஷ்ணன் என்பவரும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யுமாறு புகார் அளித்துள்ளார்.
தற்போது நாயை எறிந்து கொன்றவரின் அடையாளம் தெரிந்துள்ளது. சென்னை மாதா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வரும் கவுதம் என்ற மாணவர்தான் நாயை தூக்கி எறிந்தவர் என்பதும் அவருடைய நண்பர் ஒருவர்தான் இதை வீடியோ எடுத்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இருவரையும் கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வீடியோவை நேற்று முதல் லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவ படிப்பு படிக்கும் ஒரு மாணவன், இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
https://www.youtube.com/watch?v=JtmQrIPRKio