ராம்குமார் வெறும் அம்புதான்.புது சந்தேகத்தை கிளப்பும் எச்.ராஜா
நுங்கம்பாக்கம் சுவாதி கொலையில் கொலையாளி ராம்குமார் பிடிபட்டதால் இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று போலீசார் நிம்மதியாக இருந்த நிலையில் நெல்லையில் வாக்குமூலம் கொடுத்த ராம்குமார் திடீரென சுவாதி கொலையில் தனக்கு சம்மந்தம் இல்லை என்றும் தன்னுடைய கழுத்தை பிளேடால் அறுத்தது போலீசாருடன் வந்தவர்கள் என்றும் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் அம்பு மட்டுமே என்றும் இந்த கொலைப் பின்னணியில் உள்ள வலிமையான சக்தி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளது வழக்கை வேறு திசைக்கு திருப்புவதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது: ராமஜெயம் கொலைவழக்குபோல இல்லாமல், 8 நாட்களுக்குள் சுவாதி கொலை வழக்கு குற்றவாளியைக் கண்டு பிடித்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பாராட்டுகள்.
ஆனால், இதில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் அதிகம் உள்ளன. 3 மாதங்கள் மட்டுமே சென்னையிலிருந்த ராம்குமார், சுவாதியிடம் காதலை தெரிவித்து, அவர் ஏற்க மறுத்ததால் கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. அவர் பயன்படுத்திய கொலைக்கருவி, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதம்போல உள்ளது.
சென்னைக்கு வேலைதேடிச் சென்றவர், வீச்சரிவாளுடன் சென்றது ஏன்?. கொலை செய்வதற்காக ராம்குமார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டாரா என்று சந்தேகம் எழுகிறது. ராம்குமாரை கைது செய்ததிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
தமிழகத்தில் அநீதி, அக்கிரமங்கள் தொடர்கின்றன. சேலத்தில் வினுப்பிரியா தற்கொலைக்கு, போலீஸாரின் அலட்சியமே காரணம். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இளம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு, உரிய தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அம்பு மட்டுமே என்பது தெளிவாகிவிட்டது. எய்தவர் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதன் பின்னணியில் வலிமையான சக்தி இருப்பதாக சந்தேகிக்கிறோம். எனவே, கொலையின் பின்னணி குறித்து காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். எந்த வகையிலும், யாரையும் பாதுகாக்கும் செயலில் காவல்துறை ஈடுபடக்கூடாது’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.