“முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாற வேண்டும்’ என்று முஸ்லிம் போதகர் கூறியது உண்மையா?
“முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாற வேண்டும்’ என்று முஸ்லிம் போதகர் ஜாகிர் நாயக் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவ்வாறு தான் கூறவில்லை என்று ஜாகிர் நாயக் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் தற்போது இருக்கும் ஜாகிர் நாயக் அங்கிருந்தே பிடிஐ செய்தியாளளுக்கு பேட்டி அளித்துள்ளார். ‘ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும் என்று நான் கூறியதை மட்டும் இந்தியாவில் உள்ள அனைத்து காட்சி ஊடகங்களும் ஒளிபரப்பி வருகின்றன. இதன்மூலம், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நபரை அச்சுறுத்துபவர் பயங்கரவாதி என்று கூறினேன். அதற்கு, ஓர் உதாரணத்தையும் அப்போது தெரிவித்திருந்தேன். அதாவது, திருடனை காவல் துறை அதிகாரி அச்சுறுத்துவார். எனவே, திருடனுக்கு அந்த அதிகாரிதான் பயங்கரவாதி. அதேபோல், சமூக விரோத சக்திகளுக்கு எதிராக முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். மேலும் ஒருசில நபர்கள் முஸ்லிம்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். அவர்கள்தான் அப்பாவி மக்களை கொல்வதற்கு தூண்டுகோலாக இருக்கின்றனர் என்று ஜாகிர் நாயக் கூறியுள்ளார்..