அரசே நடத்தும் மலிவு விலை மளிகைக்கடை. தமிழகத்தில் அல்ல…ராஜஸ்தானில்!!
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தெருக்களிலும் மதுக்கடைகளை திறந்து வரும் நிலையில் ராஜஸ்தானில் அதற்கு நேர்மாறாக ஒவ்வொரு தெருவிலும் மலிவு விலை மளிகைக்கடைகளை அம்மாநிஅல் அரசே திறந்துள்ளது. தற்போது 2000 கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் இவற்றின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது மலிவு விலையில், மளிகை பொருட்களை மக்களுக்கு வழங்கத் விற்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் மளிகைக் கடைகள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ‘அன்னபூர்ணா பண்டார் யோஜ்னா ‘ என்ற திட்டத்தின் கீழ், ‘வில்லேஜ் மால்ஸ்’ என இந்தக் கடைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலான கிராமங்களில், ரேசன் கடைகளே வில்லேஜ் மால்களாக மாற்றப்பட்டுள்ளன. ராஜஸ்தான் முழுவதும் ‘வில்லேஜ் மால்ஸ்’ கடைகள் ஒரே வர்ணத்தில் காணப்படும். மாநிலம் முழுவதும் இந்த கடைகளை மிக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 150 வில்லேஜ் மால்கள் திறக்கப்பட்டதாகவும், தற்போது இந்த கடைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் 15 தேதிக்குள், 5 ஆயிரம் கடைகளை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் அரசு அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக ஃப்யூச்சர் கன்ஸ்யூமர்ஸ் நிறுவனத்துடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனமே வில்லேஜ்மால்களுக்கு தரமான பொருட்களை வழங்குகிறது. இதனால் பொருட்களை நியாயமான விலைக்கும் விற்க முடிகிறது. இந்த திட்டத்தால் ராஜஸ்தானில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.