முதல்நாளே ராம்குமாரின் கழுத்தை அறுத்துவிட்டனர். போலீஸ் மீது ராம்குமார் வழக்கறிஞர் குற்றச்சாட்டு
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கூறப்படும் ராம்குமாரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை எப்போது நடந்தது என்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
“சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது. இப்போதுதான் ஒவ்வொரு விஷயங்களாக வெளியே வருகின்றது. ராம்குமாரை போலீஸார் அதிகாலையில் கைது செய்யவில்லை. முந்தைய நாள் நள்ளிரவே கைது செய்துவிட்டனர். வெளியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு அவருடைய கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். தாடைப் பகுதியில் அறுத்தால், சரியாக பேச முடியாது என்பதால் அவ்வாறு செய்துள்ளனர். பிறகு, ரத்தம் வடிய மயங்கிய நிலையில் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தங்களை அணுகியதால்தான் அவரை புழல் சிறையில் சந்தித்ததாக கூறிய ராமராஜ் முற்போக்கு வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி இந்த வழக்கை நடத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “ராம்குமாரின் காயம் ஆழமானது. அதை விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் அது அவரால் எற்படுத்தப்பட்டதா? அல்லது வேறு யாராவது ஏற்படுத்தியதா என்கிற உண்மை தெரியவரும். மேலும், இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். ராம்குமாருக்கும் இந்த கொலைக்கும் சமபந்தமே இல்லை; அதை எங்களால் நிரூபிக்க முடியும்” என்று கூறினார்.