ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கொலையால் பதட்டம். அமர்நாத் யாத்திரை இன்று ரத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியால் அம்மாநிலத்தின் ஒருசில பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த இந்த மோதலில் மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் அண்மையில் தகவல் வெளியிட்ட புர்ஹான் வானி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகளை குடியமர்த்தினால் பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஸ்ரீநகரில் மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமர்நாத் யாத்திரையும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்று செல்வதாக இருந்த அமர்நாத் யாத்திரை பக்தர்கள் நிலைமை சரியானதும் நாளை அல்லது நாளை மறுநாள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.ல்