ஜம்மு-காஷ்மீர் கலவரம் எதிரொலி. அமர்நாத் சென்ற தமிழக பக்தர்களுக்கு சிக்கல்

ஜம்மு-காஷ்மீர் கலவரம் எதிரொலி. அமர்நாத் சென்ற தமிழக பக்தர்களுக்கு சிக்கல்

4ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்கான் வானி, இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சென்றுள்ள சுமார் 5000 பக்தர்கள் இந்த திடீர் கலவரம் காரணமாக உரிய இருப்பிட, உணவு வசதியின்றி பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும், காஷ்மீர் மாநிலத்தில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், தங்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக, தமிழக பக்தர்களில் முதியவர்கள் அதிகம் உள்ளதால், அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். யாத்திரையைத் தொடரவும் முடியாமலும், தமிழகமும் திரும்பவும் முடியாமல் அவர்கள் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதியை ராணுவம் அளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனிடையே, காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும் என, அம்மாநில முதல்வர் மெகபூபா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் கூடுதலாக ராணுவமும், மத்திய ரிசர்வ் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் வெகுவிரைவில் அமர்நாத் சென்றுள்ள பக்தர்கள் தங்களுடைய இருப்பிடம் செல்ல வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply