வீட்டுக் கடன் சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்!
சொந்த வீடு – இந்த வார்த்தையைக் கேட்டதும் அனைவருக்கும் ஓர் இனம் புரியாத சந்தோஷம். நம்மில் பலருக்கும் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிகிறதெனில், அதற்கு முக்கிய காரணம், வீட்டுக் கடன் என்கிற வசதி. சொந்த வீடு தவிர, வருமான வரியையும் மிச்சப்படுத்த வீட்டுக் கடன் வாங்கி வருகிறார்கள் பலர். இந்த வீட்டுக் கடனை சுலபமாகப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
கடன் மூலம் வீடு வாங்க முடிவு செய்ததும் முதலில் செய்ய வேண்டியது, கடனை திரும்பச் செலுத்தும் தகுதிக்கான ஆதாரங்களைத் திரட்டுவதுதான். சொத்தின் மதிப்பில் சுமார் 85% வரை கடன் தரப்படும் என்றாலும், கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதிதான் கடன் தொகையை முடிவு செய்யும்.
வருமான ஆதாரங்களை தயார் செய்யுங்கள்!
உங்கள் சம்பளம் இவ்வளவு என்பதற்கான ஆதாரமாக மூன்று மாத பே சிலிப், வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரம், வங்கிக் கணக்கு விவரம் தேவைப்படும். இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பள விவரம் மெயில் மூலம் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப் படுகிறது. இந்த நிலையில், அலுவலக ஹெச்ஆர் அல்லது கணக்கியல் பிரிவில், ஓராண்டில் அல்லது மாதம் மொத்தச் சம்பளம் எவ்வளவு என்கிற விவரத்தை குறிப்பிட்டு, அலுவலக லெட்டர் பேடில் வாங்கி வைக்க வேண்டும். இதில் உங்களுக்குக் கிடைக்கும் போனஸ் போன்ற இதர ரொக்க சலுகைகளையும் சேர்த்துக் காட்டும்போது கூடுதல் கடன் கிடைக்க வாய்ப்பாக இருக்கும்.
அடுத்து, வீட்டுக் கடன் வாங்க முடிவு செய்துவிட்டால், பணப் பரிவர்த்தனைகளை பெரும் பாலும் வங்கி மூலம் மேற்கொள் வது நல்லது. பொதுவாக, ஆறு மாத வங்கிப் பரிவர்த்தனை விவரம் கேட்பார் கள். அதில் நீங்கள் ஏதாவது கடன் வாங்கி இருந்தால், அதனை எப்படி திரும்பக் கட்டி இருக்கி றீர்கள் என்கிற விவரங் களை கவனிப்பார்கள்.
குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காமல் ஏதா வது வங்கிக் கணக்கு இருந்தால், அதனை சரிசெய்யுங்கள் அல்லது அந்த வங்கிக் கணக்குகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இதன் மூலம் சிபில் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் முக்கியம்..!
சில வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் உங்கள் அலுவலகம் அளிக்கும் வருமான விவரம் கொண்ட படிவம் 16-ன் அடிப்படையில் வீட்டுக் கடன் வழங்கும். பெரும்பாலான வங்கிகள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை கேட்கும். எனவே, முந்தைய ஆண்டுகளில் நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்றால் உடனே அதனை மேற்கொள்ளுங்கள்.
பழைய கடன்களை முடியுங்கள்..!
அடுத்து மிக முக்கியமாக செய்ய வேண்டியது, உங்களுக்கு இருக்கும் சில்லறைக் கடன்களை ஒழித்துக் கட்டுவது. உதாரணத்துக்கு, நீங்கள் வாஷிங் மெஷின் வாங்கிய வகையில் இரு தவணைகள் பாக்கி இருக்கிறது. மாதத் தவணை ரூ.3,000 என்றால் ரூ.6,000 பாக்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கடன் முடிந்தபிறகு நீங்கள் வீட்டுக் கடன் வாங்கினால் கூடுதலாக சுமார் ரூ.3 லட்சம் வாங்க முடியும். உடனடியாக வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்கிற நிலையில், வாஷிங் மெஷின் கடன் பாக்கி தொகை ரூ.6000-ஐக் கட்டி அந்தக் கடனை முடித்துவிட்டால் கூடுதல் கடன் கிடைக்கும். இதேபோல், கிரெடிட் கார்டு கடன், கார் கடன் பாக்கி இருந்தாலும், அவற்றை முடித்துவிட்டு, வீட்டுக் கடன் வாங்குவது நல்லது.
வீட்டுக் கடன் முன்பணம்..!
சொத்தின் முழு மதிப்புக்கும் கடன் தரமாட்டார்கள். சுமார் 15% முதல் 20% தொகையை கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து போட வேண்டி இருக்கும். இதனை டவுன் பேமென்ட் அல்லது மார்ஜின் மணி என்பார்கள். இந்தத் தொகையை முன்கூட்டியே தயார் செய்து கொள்வது நல்லது. இந்தத் தொகைக்கு தனிநபர் கடன் வாங்கப் போனால் அல்லது நகையை அடமானம் வைத்து கடன் வாங்கப் போனால், கூடுதல் கடன் சுமை ஏற்பட்டுவிடும். எனவே, இந்த டவுன் பேமென்ட் தொகையை முன்கூட்டியே திட்டமிட்டுத் திரட்டிக் கொள்வது அவசியம். உதாரணமாக, ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கப் போகிறீர்கள். இதன் மதிப்பில் 80%, அதாவது 24 லட்சம்தான் கடன் கிடைக்கும். மீதி ரூ.6 லட்சத்தை கடன் வாங்குபவர் கையிலிருந்து போட வேண்டி வரும்.
கேரண்டர் ரெடியா?
சில நேரங்களில் வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் கேரண்டர் கையெழுத்து கேட்கும். அதாவது, வீட்டின் மதிப்புக்கும் வாங்கும் கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் சட்டபடியான அளவாக இருக்கும் நிலையில் கேரண்டர் ஒருவரின் கையெழுத்து தேவைப்படும். இந்த கேரண்டர் வேலை பார்க்கும் அல்லது வருமானம் ஈட்டும் அப்பா, மனைவி, நண்பர், உறவினர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
ப்ரீ அப்ரூவல்!
வாங்கப் போகும் வீட்டை தேட ஆரம்பிக்கும்முன் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களிடம் முன்கூட்டியே அனுமதி (ப்ரீ அப்ரூவல்) பெற்றுக் கொள்வது நல்லது. இதற்கு என வங்கிகள் சில ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வசூல் செய்கின்றன. இந்தத் தொகை பெரும்பாலும் திரும்பக் கிடைக்காது. எனவே, நீங்கள் உறுதியாக வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்கள் என்கிறபட்சத்தில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ப்ரீ அப்ரூவல் பெறும்பட்சத்தில், உங்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகை கடன் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும் என்பதால் கடைசி நேரக் கடன் தள்ளுபடியைத் தவிர்க்க முடியும்.
மேலும், பல வங்கிகள் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் புராஜெக்ட்களுக்கு கடன் வழங்கி இருக்கின்றன. இப்படிக் கடன் வழங்கிய நிறுவனங்களிலேயே நீங்கள் வீட்டுக் கடன் வாங்குவது சுலபம். அதிக அலைச்சல் இருக்காது. போலி ஆவணம் உள்ளிட்ட மோசடிகள் தவிர்க்கப்படும்.
வீடு கட்டுவதாக இருந்தால்..!
உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் இடத்தில் வீடு கட்ட கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால் அதற்கான வேலையை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடுவது நல்லது. காரணம், உங்கள் வீட்டுக்கான கட்டுமானத் திட்ட அனுமதி (Plan) கிடைக்க எப்படியும் நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகிவிடும். எனவே, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் சுமார் ஆறு மாதத்துக்கு முன்பே பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்து விடுவது அவசியம்.
வீட்டுக் கடன் பிளான் அப்ரூவல் பெற்ற வீடுகளுக்குதான் கிடைக்கும் என்பதால் இவ்விதம் முன்னரே விண்ணப்பித்து, அனுமதி பெற்றுவிடுவது நல்லது. வீட்டுக்கான பிளானைப் போடும்போது, அதற்கான தோராய செலவு எவ்வளவு ஆகும் என்பதை இன்ஜினீயர் ஒருவரிடம் கேட்டு அதற்கேற்ப போடுவது நல்லது. நீங்கள் பெரிய பிளானாக போட்டுவிட்ட நிலையில், உங்கள் சம்பளத்துக்கு குறைவான தொகை கடனாக கிடைத்தால் கஷ்டம்தான். மேலும், வீடு கட்டுவதாக இருந்தால், எப்போதும் சில லட்சம் ரூபாயைக் கூடுதலாக வைத்திருப்பது நல்லது. காரணம், சிமென்ட், மணல் விலை எப்போது வேண்டுமானாலும் உயரக்கூடும். அப்போது கையில் கூடுதல் பணம் இல்லை என்றால் கஷ்டம்தான்.
பழைய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதாக இருந்தால் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் குறிப்பிடும் மதிப்பீட்டாளர் களிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கை வாங்கிக் கொடுக்க வேண்டி இருக்கும்.
அடுத்து, பத்திரப் பதிவு, விற்பனை வரி உள்ளிட்ட இதர செலவுகள் சில லட்சங்கள் இருக்கின்றன. இவற்றுக்கும் சேர்ந்து பணம் திரட்டத் திட்டமிடுவது நல்லது.
கூடுதல் கடன் தேவைப்படும்பட்சத்தில்..!
உங்களுக்குக் கூடுதல் கடன் தேவைப்படும்பட்சத்தில் உங்களிடம் இருக்கும் பாண்டு பத்திரங்கள், ஃபிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு பாலிசிகளை சொத்து ஆவணங்களுடன் அளித்தும் கூடுதலாக கடன் பெற முடியும்.
சலுகை வட்டி!
வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது, கடனுக்கான வட்டி விகிதம். ஃபிக்ஸட் ரேட், ஃப்ளோட்டிங் ரேட் என இரு வட்டி வகைகளில், அதிகம் பேர் தேர்வு செய்வது ஃப்ளோட்டிங்-ஆக இருக்கிறது.
சில வங்கிகள் ஒருவர் பணிபுரியும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, அரசுப் பணி ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி விகிதத்தில் சிறு சலுகையை அளிக்கின்றன. சிபில் புள்ளிகள் அடிப்படையில் வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா வழக்கமான வட்டி யிலிருந்து 0.5 – 0.75% குறைவான வட்டியில் சிபில் ஸ்கோர் அதிகம் உள்ளவர்களுக்கு கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதனை மற்ற வங்கிகளும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் வட்டி விகிதத்தில் சலுகை பெறமுடியும். இந்த வழிமுறைகளை பின்பற்றி சொந்த வீட்டுக்காரர் ஆக வாழ்த்துகள்!