சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்
மருத்துவம் இல்லாமல் சர்க்கரை நோயை விரட்டியடிக்க இரண்டே இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று உணவு. மற்றொன்று உடற்பயிற்சி. இவை இரண்டுமே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல தீர்வைத் தரும். உணவைப் பொறுத்தவரை தீட்டிய அரிசியை விட கைக்குத்தல் அரிசியையே பயன்படுத்த வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு சேர்வதை வெகுவாக குறைக்கிறது.
கோதுமை, கம்பு, கேப்பை போன்றவை அரிசியை விட அடர்த்தியான பொருட்களாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளின் கணையம் அதிக சிக்கலுக்கு உள்ளாகாமல் காப்பாற்றப்படுகிறது.
நார்ப்பொருள் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அது ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏறுவதை தடுக்கிறது. காய்கறிகள், கீரைகள் அதிகமாக பயன்படுத்தலாம். இனிப்பில்லா பழங்களை உண்ணலாம். பப்பாளி, தக்காளி, அன்னாசி, தர்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், கொய்யா, மாதுளை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். மா, பலா, வாழை அறவே கூடாது.
உடற்பயிற்சியைப் பொறுத்தவரை சர்க்கரை நோயாளிகள் உடலின் எல்லா பகுதிகளுக்கும் உடற்பயிற்சி கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். ரத்த ஓட்டம் சீராக சென்று கொண்டே இருக்க வேண்டும். நடக்கும் போது கைகால்களை வீசி கொஞ்சம் வேகமாக நடப்பது நல்லது. யோகாசனங்கள் நல்ல பலனைத் தரும்.
உடலின் எல்லா தசைநார்களையும் இயக்கிவிடும் அளவிற்கு ஆசனங்களில் பல வகைகளைத் தேர்வு செய்து செய்வது நல்லது. உடற்பருமன், தொந்தி உள்ள நோயாளிகள் அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை நோய் ஒரு அகச்சுரப்பியின் கோளாறு. அதில் தைராய்டு, பிட்யூட்டரி போன்ற மற்ற சுரப்பிகளும் ஒருங்கிணைந்து வேலை செய்வது அவசியம்.
உணர்ச்சிவசப்படுதல் (டென்ஷன்) மூலமும் சர்க்கரை நோய் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தியானம் டென்ஷனைக் குறைக்கிறது. அதனால் தியானம் மிக அவசியம். யோகா, தியானம் ஆகியவற்றை ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடம் செய்தால் போதும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.