ராம்குமார் கூலிப்படையை சேர்ந்தவரா? திடுக்கிடும் தகவல்

ராம்குமார் கூலிப்படையை சேர்ந்தவரா? திடுக்கிடும் தகவல்

ramkukmarசுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை குற்றவாளியை அடையாளம் காணும் அணிவகுப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அப்பாவி என்றும், அமைதியானவர் என்றும் கூறப்பட்ட ராம்குமார், கூலிப்படையை சேர்ந்தவரா? என்று அவரது வழக்கறிஞரே சந்தேகத்தை கிளப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துவிட்டு வெளியே வந்த வழக்கறிஞர் ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ” போலீஸாரின் விசாரணை சரியான திசையில்தான் செல்கிறது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வழக்கின் பின்புலத்தையோ கொலைக்கான காரணங்களையோ ஆய்வு செய்யாமல் ‘ஒருதலைக் காதல்’ என்று சொல்வது மிகத் தவறானது. சுவாதியின் செல்போன் நம்பர் என்னவென்று ராம்குமாருக்குத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையில் பலமான நட்பு இல்லை. சென்னைக்கு ராம்குமார் வந்ததற்கான நோக்கம் படிப்பதற்கோ, வேலையில் சேருவதற்கோ இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர் வந்த நோக்கம் மற்றும் சுவாதி கொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன என விடை தெரியாத கேள்விகள் அணிவகுக்கின்றன. சுவாதியைக் கொல்வதற்கு ராம்குமார் கூலிப்படையாகச் செயல்பட்டாரா என்ற ரீதியிலும் விசாரணை செல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்த கொலை வழக்கில் ராம்குமாரை இயக்கிய சக்திகள் சிலர் இருப்பதாக வலுவான சந்தேகம் எழுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் என்பதையும் தாண்டி, சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறேன்” என்றவர், ராம்குமாரோடு நடந்த உரையாடலை விவரித்தார்.

” சென்னை வந்த நோக்கத்தைப் பற்றி தெளிவான பதில் அவரிடம் இல்லை. அரியர் எக்ஸாம் எழுத சென்னை வந்தேன் என்றார். நெல்லையிலே அரியர் எக்ஸாம் எழுத முடியுமே என நாங்கள் கேட்டபோது, கவர்மெண்ட் எக்ஸாம் எழுத வந்தேன் என்கிறார். யார் கூட்டிக்கொண்டு வந்தார்கள் என்று கேட்டால், எந்தப் பதிலுமில்லை. போலீஸார் கைது செய்தபோது, நானே ரெண்டு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டேன் என்கிறார். பிறகு, போலீஸுடன் வந்தவர்கள் அறுத்தார்கள் என்றார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சுவாதியோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றார். சுவாதியைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தலையைக் கீழே குனிந்து கொண்டார். அவரால் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. இதனாலேயே கூலிக்காக இந்தக் கொலை நடந்திருக்குமோ என சந்தேகம் கிளம்புகிறது. அந்தப் பெண்ணின் கல்வி, தகுதி, சமூக அந்தஸ்து ஆகியவற்றையும் ராம்குமாரின் சமூக அந்தஸ்து, படிப்பு, வருமானம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான். சுவாதியிடம் சிலமுறை இவர் பேசியிருக்கிறார். ஆனால் நெருக்கம் இல்லை என்கிறார்.

சென்னை வந்த நோக்கம், குறுகிய காலகட்டம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கூலிக்காக கொலை செய்யவே சென்னை வந்திருக்க வாய்ப்பு அதிகம். தவிர, கொலை நடந்த அன்றே சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். அவர் அங்கேயே தங்கியிருந்திருந்தால்கூட இந்த சந்தேகம் வந்திருக்காது. இந்தப் பெண்ணின் கடந்தகால நட்புகளில் பாதிக்கப்பட்டவர்கள், ராம்குமாரை வைத்து கொலைச் செயலை அரங்கேற்றியிருக்கலாம். சுவாதி கொலையைப் பற்றி எதுவும் பேசாமல் வார்த்தைகளை விழுங்குகிறார் ராம்குமார். எங்களிடம் திக்கித் திணறி பேசுகிறார். ராம்குமாரையும் கடந்து வழக்கின் விசாரணை செல்ல வேண்டும் என விரும்புகிறோம். சுவாதி சாக வேண்டும் என விரும்பியவர்கள் யார்? ராம்குமாரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கூலிப்படையை நோக்கி போலீஸாரின் கவனம் செல்லவில்லை. அப்படிச் சென்றால் சுவாதியின் பழைய நட்புகள் வெளியில் தெரிந்துவிடும் என மேலிடம் வரையில் செல்வாக்கு விளையாடுகிறது. அதனாலேயே ராம்குமாரோடு வழக்கை முடித்துக் கொள்ள போலீஸார் விரும்புகின்றனர். இதுதான் உண்மை.

கொலை செய்வதற்காக சில வாக்குறுதிகள் ராம்குமாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். ராம்குமாரிடம் பேசியபோது, ‘சொந்த ஊருக்குள் முந்தைய காதலோ, அடிதடி தகராறோ எதுவும் இல்லை’ என்கிறார். ’10 நாளில் பெயில் கிடைக்குமா… அப்பா, அம்மாவைப் பார்க்க முடியுமா?’ என்றுதான் அடிக்கடி கேட்டார். நிறைய விஷயங்களைப் பேச அவர் தயங்குகிறார். அவர் மனதுக்குள் நிறைய உண்மைகள் புதைந்திருக்கின்றன. மனரீதியான நெருக்கடிக்கு அவர் ஆளாக்கப்பட்டிருக்கிறார். போலீஸாரின் நிர்பந்தம்தான் இதற்குக் காரணம். கொலைக்கான பின்னணி வெளியில் வருவதை காவல்துறை விரும்பவில்லை. சுவாதி வழக்கின் புலனாய்வில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். புழல் சிறையில் நாங்கள் பேசிய 45 நிமிடங்களும், ராம்குமார் மீதான சந்தேகத்தை அதிகரிக்கவே செய்திருக்கின்றன” என்று கூறியுள்ளார். இவரது பேட்டியில் இருந்து இந்த கொலைக்கு வேறு சிலரும் காரணம் என்பது தெளிவாகிறது. போலீசார் அந்த வேறு சிலரை பிடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply