எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பதாகவும் கருணா என்ற போலீஸ்காரர் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் பானு, காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், தீர்ப்பை 13ம் தேதி (இன்று) பிறப்பிப்பதாக கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 7 பேர்களும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.