கமல்ஹாசனுக்கு திடீர் எலும்பு முறிவு. சென்னை அப்பல்லோவில் அனுமதி
பிரபல நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து தற்போது நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகியுள்ள நிலையில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்ததால் காயம் அடைந்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு கால்மூட்டு மற்றும் முதுகுதண்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கமல்ஹாசனின் காயத்திற்காக சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கமலுக்கு ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பூரண குணமடைந்து கமல் வீடு திரும்பியதும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.