கால்நடை மருத்துவப் படிப்பு: பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் சேர்க்கை கடிதத்தை மாணவி ஆர்.நிவாசினிக்கு வழங்குகிறார் துணைவேந்தர் எஸ்.திலகர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் சேர்க்கை கடிதத்தை மாணவி ஆர்.நிவாசினிக்கு வழங்குகிறார் துணைவேந்தர் எஸ்.திலகர்.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினருக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 28 இடங்கள் நிரம்பின.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு (பி.விஎஸ்சி) 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
முதல்நாளான புதன்கிழமை, கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பிளஸ் 2 வகுப்பில் தொழிற்கல்வி எடுத்துப் படித்த மாணவர்களுக்கு 16 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 இடங்கள், விளையாட்டுப் பிரிவில் 5 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான வாரிசுகளுக்கு 1 இடம் என மொத்தம் 34 இடங்கள் அடங்கும்.
இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 5 காலியிடங்கள் ஏற்பட்டன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான பிரிவில் யாரும் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. எனவே, கலந்தாய்வின் முடிவில் 34 இடங்களில் மொத்தம் 28 இடங்கள் நிரம்பின. சிறப்புப் பிரிவில் மீதம் உள்ள 6 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப்பிரிவினருக்கு: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 292 இடங்களுக்கு நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 1,600 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு, கால்நடைத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணரெட்டி சேர்க்கைக் கடிதங்களை வழங்கி கெüரவிக்கவுள்ளார்.
ஜூலை 15-ஆம் தேதி தொழில்நுட்பப் படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கும், பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.