இந்தியாவின் டாப் முதல்வர் யார்? ஆச்சரியமான ஒரு முடிவு
ஜுலை 16ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களின் மாநாட்டுக் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதற்கு முன்னர் இந்தியாவில் சிறப்பான நிர்வாகத்தை தரும் முதல்வர் யார்? என்பதை அறிந்து கொள்ள பிரதமர் தெரிந்து கொள்ள வசதியாக ஐ.பி மற்றும் தனியார் ஏஜென்சிகள் இந்தியாவில் சிறப்பான பணியில் ஈடுபட்டு வரும் முதல்வர் யார் என்பது குறித்த ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தற்போது சூப்பர் முதல்வர் யார் என்பது குறித்த விபரம் தெரிய வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலிடத்தை பிடித்துள்ளார். ரூ. 40 ஆயிரம் கோடி செலவில் மாநிலம் முழுவதும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, ரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள் உள்பட பல மக்கள் நலத்திட்டங்களும் நேர்மையான உழைப்பும் அவரை சூப்பர் முதல்வராக மாற்றியுள்ளது. இந்த பட்டியலில் மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு 2வது இடமும், சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு 3வது இடமும், குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 5வது இடம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தில் மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றியுள்ள போதிலும் அவர் இந்த பட்டியலில் 13 வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஆந்திர மாநில நிர்வாகம் மறுத்து சந்திரபாபு நாயுடு 5வது இடத்தில் இருப்பதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில் தமிழக முதல்வரின் பெயர் எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. எனினும் ஜுலை 16 ம் தேதி நடைபெறவுள்ள முதல்வர்கள் கூட்டத்தில் டாப் முதல்வரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Who is the top most CM in India?