அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக பேமா காண்டு தேர்வு
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மிண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் திடீரென அதிரடி நடவடிக்கையாக அருணாச்சலபிரதேச காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பேமா காண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான தேர்வு மாநில கட்சி அலுவலகத்தில் சற்று முன் நடைபெற்றது. 44 எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது, முன்னாள் முதல்வர் டோர்ஜீ காண்டுவின் மகனான பேமா காண்டு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.வான கலிக்கோ புல்லும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல சட்டப்பேரவையின் மொத்த பலம் 58. இதில் 11 உறுப்பினர்கள் பாஜகவினர், இருவர் சுயேட்சை. சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் கட்சிக்கு திரும்பிய அதிருப்தியாளர்களை சேர்த்தால் காங்கிரஸ் கட்சியின் தற்போது பலம் 45-ஆக உள்ளது. எனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேமா காண்டு தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை தற்போது சந்திக்கச் சென்றுள்ளார்.