குடிப்பதற்கு கூட உகந்ததாக இல்லாத கங்கை நீர் எப்படி புனித நீர் ஆனது? அஞ்சல் நிலையங்களில் போராட்டம்
இந்துக்கள் புனிதமாக கருதப்படும் கங்கை நீரை கடந்த வாரம் முதல் அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக அஞ்சலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கங்கை நீரை புனித காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துமாறு இந்திய அஞ்சல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 200 மி.லி., 500 மி.லி. அளவுகள் கொண்ட பாட்டில்களில் அடைக்கப்பட்ட கங்கை நீர் சென்னையில் அண்ணா சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் கடந்த வாரம் முதல் விற்பனையாகி வருகிறது. முதல் நாளில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.
இந்நிலையில் ஒருசிலர் கங்கை நீரை குடிப்பதற்குப் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இதுகுறித்து அஞ்சல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, “புனித கங்கை நீர் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், பிற அஞ்சல் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கங்கோத்ரி, ரிஷிகேஷிலிருந்து கொண்டு வரும் கங்கை நீர் புனிதத்தன்மை பெற்றது. இருப்பினும், பாட்டில்களிலேயே தெளிவாக குடிப்பதற்கு உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிப்பதற்கான வழிமுறைகள் இதில் மேற்கொள்ளவில்லை. எனவே குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார்.
இந்நிலையில் குடிப்பதற்கு கூட உகந்ததாக இல்லாத நீரை எப்படி புனித நீர் என்று ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய சில அமைப்பினர் அஞ்சல் நிலையங்களின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.