தேவை-ஒளிவுமறைவற்ற சேர்க்கை
ஜனவரி மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படும். அக்டோபரில் தசரா பண்டிகையும், தீபாவளியும் கொண்டாடப்படுகின்றன. இதனிடையே, கோடை காலத்தில் நடைபெறுவது தொழில் கல்வி கல்லூரி சேர்க்கைக் கொண்டாட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் மார்ச்- ஜூன் என 3 மாதங்கள் நடைபெறுகிறது.
இந்த 3 மாத காலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் கருப்புப் பணம் உருவாகும் துறைகளில் கல்வித் துறை இரண்டாவது இடத்தில் இருப்பதாக தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவன அறிக்கை கூறுகிறது.
தொழில் கல்விக் கல்லூரிகளில் ஆண்டுக்கு நுழைவு நன்கொடை சுமார் ரூ. 6,000 கோடி உள்ளதுடன், ஒவ்வோர் ஆண்டும் கருப்புப் பணம் உருவாவதை உறுதி செய்கிறது.
இந்தக் கருப்புப் பண மதிப்பை எவ்வாறு பூஜ்யமாக்குவது என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சல்மான் குர்ஷித்தை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த அறிக்கை நிலுவையில் உள்ளது. ஆனால், ஆண்டு கொண்டாட்டம் மிகப் பெரிய அளவில் நிகழ்கிறது.
ஒழுங்குமுறை அமைப்புக்கும், கல்லூரிகளுக்கும் இடையேயான கூட்டு காரணமாக இது சாத்தியமாகிறது.
நுழைவு நன்கொடை பிரச்னை புதிதாக உருவானதல்ல. உச்ச நீதிமன்றத்தில் 1993-ம் ஆண்டில் புகழ்பெற்ற உன்னிகிருஷ்ணன் வழக்கில் அரசியலமைப்புச் சட்ட விதியை உறுதி செய்ததுடன், அதைவிட ஒரு படி மேலே சென்று வணிகக் கண்ணோட்டத்துடனான சேர்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஒரு திட்டத்தையும் வடிவமைத்தது.
இந்தத் திட்டம் அரசியலமைப்பு சட்டத்தின்படி சரியானதுதான் என்பதை 2002-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற டி.எம்.ஏ. பைய் அறக்கட்டளை வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது. மேலும், இந்த அமர்வு சுயநிதிக் கல்லூரிகளின் உரிமைகளைச் சரியான முறையில் மீட்டது.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் 2003-ம் ஆண்டில் இஸ்லாமிக் அகாதெமி, 2005-ம் ஆண்டில் பி.ஏ. இமாம்தார் வழக்குகளில் தனியார் கல்லூரிகளின் உரிமைகளைப் பலப்படுத்தியது. மேலும், நுழைவு நன்கொடைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், சேர்க்கையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, சுரண்டல் இன்மை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த மூன்று அளவீடுகளும் தொழில் கல்வி கல்லூரிகளில் சேர்கையைக் கண்காணிப்பதற்கு அளவுகோலாக உள்ளன.
இதன்படி, சேர்க்கை நடைபெற்றிருந்தால், இப்போதைய பொது நுழைவுத் தேர்வு (“நீட்”) வழக்கில் உள்ள குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். மாறாக, நுழைவு நன்கொடைக்கு மாநில விதிகள், சட்ட ரீதியான நெறிமுறைகள் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கு அதிகரித்து வரும் பெற்றோர்களின் பதற்றமும், அதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளே காரணம். எனவே, தனியார் கல்லூரிகளில் தகுதியைவிட பணம் முன் நிற்கிறது.
வசதி படைத்த பெற்றோர் தொழிற்க் கல்வி கல்லூரி இருக்கைகளை முன்பதிவு செய்வதும் (சிலர் பிளஸ் பொதுத் தேர்வுக்கு முன்பாகவே), நுழைவு நன்கொடையை வழங்குவதுமே தொழில் கல்விக் கல்லூரி இருக்கைகளை விற்பனைப் பொருளாகத் தரம் தாழ்த்திவிட்டன. இதில் அதிகத் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கே இடம் கிடைக்கும் என்ற நிலையே தற்போதைய நடைமுறையாக உள்ளது. இதுபோன்ற முறை இந்தியாவின் எதிர்கால உடல் நலம், பொது உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தகுதியற்ற மருத்துவர்களையும், பொறியாளர்களையுமே தயார்படுத்தும்.
மாணவர்கள் தங்களுடைய சுய தகுதியின் அடிப்படையில் பெறும் சேர்க்கையில் கிடைக்கும் மன நிறைவு, பெற்றோர்களின் பண பலத்தால் பெறும் சேர்க்கையில் கிடைக்காது.
சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் இளைய தலைமுறையினர் பல்வேறு இதர வேலைவாய்ப்பு குறித்தும் அறிந்துள்ளனர்.
பெற்றோர் தங்களது குழந்தைகளை தொழில் கல்வி கல்லூரி சேர்க்கை நோக்கி தள்ளுவதைவிட, குழந்தைகள் தங்களது உண்மையான தகுதியைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப மாற்று வாழ்க்கைக் கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
வசதி படைத்த பெற்றோர் தங்களது குழந்தைகளின் உண்மையான தகுதியையும், திறனையும் அறிந்து கொள்வதில்லை. இது மட்டுமல்லாமல், உண்மையான, தகுதியான மாணவர்களின் நியாயமான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. உயர் பட்டப் படிப்புகளில் எதிர்கால மதிப்பு தெரியாமல், கண்மூடித்தனமாக முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசு 15 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதினரிடையே வேலையின்மை குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதில் அண்மையில் சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கும்போது, கல்வித் தகுதி அதிகரிக்க, அதிகரிக்க வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கையும் அதிகரிக்கிறது எனத் தெரிகிறது. பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.
இந்த அறிக்கை உணர்த்துவது என்னவென்றால், ஒருவர் அதிகம் படித்திருந்தால் வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவராகிறார். இதற்கு கல்வியே தேவை இல்லை என்பது அர்த்தமில்லை. முறையான கல்விப் பெறாதவர்கள் சாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள நிலையில், அவர்கள் சரியான பட்டப்படிப்பைத் தேர்வு செய்தால், அவர்களுடைய சாதிக்கும் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்பதே.
சட்டம், இதழியல், சமூக அறிவியல், மானுடவியல், படைப்புக் கலைகள், வடிவமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதுபோன்ற துறைகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், பெற்றோர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளின் லட்சியங்களைப் புரிந்து கொள்வதற்குப் பெற்றோர்கள் பொறுமை காக்க வேண்டும். நுழைவு நன்கொடை போட்டியில் இணைவதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பள்ளி தேர்வு மதிப்பெண்களையும், போட்டித் தேர்வு மதிப்பெண்களையும் இணைத்து உருவாக்கப்படும் சேர்க்கை முறைக்கு மாறுவதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.
தங்களுடைய குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்குப் பெற்றோர்கள் 10 மாதங்கள் காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, குழந்தைகள் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குக் காத்திருக்கமாட்டார்களா?
நுழைவு நன்கொடை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சி எங்கிருந்தாவது தொடங்கப்பட வேண்டும். அது, பெற்றோர்களிடமிருந்தே தொடங்கட்டும். அதுவே எனது வேண்டுகோள். தூய்மையான தொழில் கல்வி சேர்க்கை பெற்றோர்களிடமிருந்து தொடங்கட்டும்.