ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘கபாலி’ முடிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் உலகம் முழுவதும் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கப்பட்ட திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்குரிய காட்சிகளின் டிக்கெட்டுக்கள் ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதைப்படி ஒரு சரியான கிளைமாக்ஸை இயக்குனர் ரஞ்சித் வைத்திருந்ததாகவும், ஆனால் ரஜினி படத்தில் பாசிட்டிவ் முடிவு வேண்டும் என்பதற்காக செளந்தர்யா ரஜினியும், கலைப்புலி எஸ்.தாணுவும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிறிய அளவில் மாற்றம் செய்யவும் கேட்டுக்கொண்டார்களாம்.
இதற்கு அரைமனதுடன் ரஞ்சித் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இதுகுறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து ரஞ்சித்துக்கு போன் செய்து, ‘கபாலி’ கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்ற வேண்டாம் என்றும் இந்த கதைக்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறிவிட்டாராம். எனவே இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஏற்கனவே திட்டமிட்டபடியே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இருந்து இந்த படத்தின் கிளைமாக்ஸ் சுபமாக இருக்காது என்றும் நீண்ட இடைவெளிக்கு ரஜினி படம் ஒன்று சோகத்தில் முடியும் என்று கூறப்படுவதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.