உ.பி மாநில பாஜக துணைத் தலைவருக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்!
பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் தயா சங்கர், பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரசியலில் ஈடுபடும் பெண்கள் அனைவரையும் அவர் கேவலப்படுத்தியுள்ளதாகவும் அவர் மீது பாஜக மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல பெண் அரசியல் தலைவர்கள் தயா சங்கரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தயா சங்கர் உ.பி.மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவரை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா பாஜக மேலிடத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ‘உத்தரப்பிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங், மிகவும் மோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் மாயாவதியைப் பற்றி விமர்சித்துள்ளார். அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது
அதுவும் தயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழுக்கை தேடித் தருவதாகவே உள்ளது. அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருப்பதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.