‘கபாலி’ திரைவிமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் எதிர்பார்ப்புக்கு எல்லை இருக்காது என்பது தெரிந்ததே. அதேபோல் இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பை விவரிக்க தமிழில் வார்த்தையே இல்லை. ஆனால் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றே படம் முடிந்து வெளியே வரும்போது எண்ண தோன்றுகிறது.
மலேசிய தமிழர்களுக்காக போராடிய ரஜினி, 25 வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வருகிறார். சிறைக்கு செல்லும் முன் கர்ப்பிணியாக இருந்த மனைவி ராதிகா ஆப்தே மற்றும் மகளை தேடுகிறார். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரஜினியை அழைத்து செல்லும் அவரது வலது கை ஜான்விஜய், இந்த 25 வருடங்களில் நடந்தது என்ன என்பதை ரஜினிக்கு விவரிக்கின்றார்.
மேலும் தமிழ் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கும் கும்பல் ஒன்றை குறித்து கபாலியிடம் ஜான்விஜய் கூறுகிறார். இருவரும் சேர்ந்து அந்த கும்பலை அடித்து நொறுக்கின்றனர். இந்நிலையில் ‘கபாலி’ பெயரில் இயங்கி வரும் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மையம் ஒன்றை கலையரசன் நடத்தி வருகிறார். அங்கு வரும் ரஜினி, அதில் ரித்விகாவும் இருப்பதை பார்க்கின்றார்.
மனைவியையும், குழந்தையையும் தேடி வரும் ரஜினி, ஒரு சந்தர்ப்பத்தில் கிஷோரின் போதை மருந்து கும்பலில் இருக்கும் மைம்கோபியை கொலை செய்கிறார். இதனால் ரஜினிக்கும் கிஷோருக்கும் பகை வளர்கிறது. கிஷோரின் போதை கும்பலையும், அவருக்கு தலைவராக இருக்கும் சீன வில்லனையும் ரஜினி துவம்சம் செய்தாரா? தனது மனைவி ராதிகா ஆப்தே மற்றும் குழந்தையை கண்டுபிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை
அறிமுகக்காட்சி உள்பட முதல் 15 நிமிடங்கள் மற்றும் கிளைமாக்ஸில் 20 நிமிடங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதகளப்படுத்துகிறார். விசில் சத்தம் இடைவிடாமல் ஒலிக்கின்றது. ஆனால் பிளாஷ்பேக் ஆரம்பித்ததும் திரைக்கதையின் வேகம் குறைகிறது. மலேசிய தமிழர்கள், அடக்குமுறை, விடுதலை, கேங்ஸ்டர் போன்ற காட்சிகள் ஓகே என்றாலும் ரஜினி ரசிகர்கள் ரசிக்கும்படி இல்லை.
படத்தை தூக்கி நிறுத்துவது ரஜினி ஒருவரே. டான் ஆக இருக்கும்போதும், ராதிகா ஆப்தேவிடம் நளினமாக காதலை வெளிப்படுத்தும் விதமும், 25 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது ரஜினியின் நடிப்பு வேற லெவலில் இருக்கின்றது. அதேபோல் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வயதானாலும் அதே வேகத்தில் ஆக்சன் காட்சிகள் அமைந்துள்ளது சிறப்பு. சில நிமிடங்களே வரும் இளமை ரஜினி அப்படியே 30 வருடங்களுக்கு முந்தைய ரஜினியை நினைவுபடுத்துகிறார்.
ராதிகா ஆப்தேவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பு நிறைவு. ரஜினியின் மகளாக வரும் தன்ஷிகாவுக்கு அதிகபட்ச நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அவரும் அதை நன்றாகவே பயன்படுத்தியுள்ளார்.
மலேசிய கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, கிஷோர் உள்பட வில்லன்கள் கதாபாத்திரங்கள் வெயிட்டாக உருவாக்கப்படவில்லை. கலையரசன் கேரக்டர் கச்சிதம். ஆனால் கொஞ்சம் கனமான வேடத்தை தாங்கியுள்ள தினேஷுக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவே இல்லை. ரஞ்சித் தனது குழுவினர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் பொருந்தாத கேரடர்களை உருவாக்கியுள்ளார்.
ரஜினியை எதிர்த்து பேசும் ஆவேசமான கேரக்டர் ரித்விகாவுக்கு. இந்த கேரக்டரை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ரஜினியை அடுத்து படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் நாராயணன். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, தேவையான இடங்களில் நச்சென கொடுத்துள்ளார். அதேபோல் எடிட்டிங் மிக கச்சிதம். முரளியின் கேமரா, செட்டில் எடுக்கப்பட்ட காட்சியையும் இயல்பாக காண்பித்துள்ளது.
எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ரஜினி என்ற தனி மனிதர் இந்த படத்தை தூக்கி நிறுத்துகிறார். ‘சிவாஜி’ அளவுக்கு எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் லிங்காவை விட பெட்டர்தான்.
மொத்தத்தில் ‘கபாலி’ சுப்பர் ஸ்டாரின் ஒன்மேன் ஷோ