வழிகாட்ட வந்தான் வடிவேலன்!
அந்த திருத்தலத்தைவிட்டு நீங்கவே இஷ்டம் இல்லை அந்த அடியவருக்கு. ஒன்றா, இரண்டா… திரும்பிய பக்கங்கள் எல்லாம் திருக்கோயில்களைக் கொண்ட ஊர் அல்லவா? அந்த ஆலயங்கள் அத்தனையையும் ஒரே நாளில் தரிசிப்பது சாத்தியம் இல்லையே! ஆகவே, தன்னால் எத்தனை ஆலயங்களைத் தரிசிக்க இயலுமோ, அத்தனை ஆலயங்களைத் தரிசித்துமுடித்து, தனது ஊருக்கும் புறப்பட்டுவிட்டார் அடியவர்.
ஆனாலும் அவருக்கு ஆற்றாமைத் தீரவில்லை; ஊரின் எல்லைக்கு வந்துவிட்டவர், ஒருமுறை திரும்பிப் பார்த்தார். தூரத்தில் தெரிந்த ஆலயக் கோபுரங்களை எல்லாம் தரிசித்தவர், சிரம் மேல் கரம் குவித்து வணங்கினார். அடுத்த முறை வரும்போது சிலபல நாட்கள் தங்கியிருந்து எல்லா கோயில்களையும் தரிசித்து விடவேண்டும் என்று மனதுக்குள் சங்கல்பித்துக் கொண்டு, பயணத்தைத் தொடர முற்பட்டார்.
அப்போதுதான் அந்த இளைஞன் எதிர்ப்பட்டான். ‘‘என்ன ஸ்வாமி, காஞ்சிக் கோயில்கள் எல்லாத்தையும் தரிசனம் பண்ணியாச்சா?’’ என்று கேட்டான்.
‘‘நான் தரிசனத்துக்குத்தான் வந்தேன் என்று எப்படியப்பா கண்டு கொண்டாய்?’’
அவன் கேள்விக்கு பதில் கேள்வி தொடுத்ததுடன், அவன் யார் என்னவென்று அறியும் முனைப்புடன், அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் நோட்டம் இட்டார் அடியவர். அதை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான்.
‘‘ஐயா! பார்வையால் என்னை அளவெடுப்பது இருக்கட்டும். இங்கே குமரக்கோட்டம் என்றொரு கோயில் இருக்கிறதே… அதை தரிசித்தீர்களா?’’ என்று தனது அடுத்த வினாவை வீசினான்.
‘‘அப்பனே! காமாட்சியம்பிகையின் ஆலயம் முதலாக… இன்று என்னால் எவ்வளவு முடியுமோ அத்தனைக் கோயில்களைத் தரிசித்தேன். ஆனால், நீ சொல்வதுபோல் குமரக்கோட்டம் எனும் கோயிலைப் பற்றி அன்பர்கள் எவரும் சொல்லவில்லையே?’’ என்றார் அந்த அடியவர்.
‘‘இப்போது நான் சொல்லி விட்டேன் அல்லவா? பிறகென்ன குமரக்கோட்டத்துக்கும் ஒருநடை வந்துவிட்டுச் செல்வதுதானே?’’
குமரக்கோட்டம் எனும் திருப்பெயரும், ஏதோ தனது சொந்த வீட்டுக்கு அழைப்பதுபோல் அந்த இளைஞன் அழைத்த முறையும் அடியவரின் மனதைக் கவரவே, அந்த ஆலயத்தைத் தரிசித்து விட்டே செல்வது என்று முடிவுக்கு வரச்செய்தது அடியவரை. ஆகவே, அந்த இளைஞனை முன்னே செல்லவிட்டு, அவனைப் பின்தொடர்ந்தார். இரண்டொரு நாழிகைகளுக்குப் பிறகு கீரைப் பாத்திகளுக்கு நடுவில் அமைந்திருந்த குமரக்கோட்டத்தையும் கொடிமரத்தையும் அவருக்குச் சுட்டிக்காட்டினான் இளைஞன். அவற்றைத் தரிசித்ததும்தான் தாமதம், இனம்புரியாத பரவசம் தொற்றிக்கொண்டது அடியவருக்கு. உடல் நடுங்க, உள்ளம் சிலிர்க்க, கண்களில் நீர் சுரக்க ‘‘குமரனுக்கு அரோகரா’’ என்று தன்னையும் அறியாமல் வாய்விட்டு கூவியவர், அதே உணர்ச்சிப் பெருக்குடன் அங்கேயே- அந்த திசையை நோக்கியவண்ணம் சிறிதுநேரம் அசையாமல் நின்றுவிட்டார்.
பிறகு ஒருவாறு சகஜநிலைக்கு மீண்டவர், இளைஞனுக்கு நன்றி சொல்ல திரும்பினால், அவன் அங்கு இல்லை! மாயமாய் மறைந்திருந்தான். பெரும் திகைப்புக்கு ஆளானார் அடியவர். ‘அப்படியென்றால்… வந்தது சாட்சாத் முருகப்பெருமானேதான்’ என்று உணர்ந்தவர், சற்றும் தாமதிக்காமல் விறுவிறுவென அந்தக் கோயிலை நோக்கி விரைந்தார். உள்ளே கருணைக்கடலென சந்நிதி கொண்டிருக்கும் அழகன் முருகனை, குமரக்கோட்டக் கடவுளைக் கண்ணாரத் தரிசித்து உளமார வணங்கி மகிழ்ந்தார்.
இத்தகு பெரும்பேறு பெற்ற அந்த அடியவர் யார் தெரியுமா?
மண் மகிழ்ந்திட, மாகம் மகிழ்ந்திட எண்மகிழ்ந்த பன்னொன்றின் இராவிலே… எந்த அடியவருக்கு முருகப்பெருமான் மயூரநடன தரிசனம் அளித்தானோ, அதே அடியவர்… என்ன, இன்னும் உங்களால் யூகிக்க முடியவில்லையா?
குமார ஸ்தவம், சண்முகக்கவசம், சரவணப்பொய்கை திருவிளையாடல் முதலான ஞானப்பொக்கிஷங்களை இவ்வுலகுக்கு வழங்கிய ஆம்! ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளே அவர்!
அவருக்கு, முருகப்பெருமானே நேரில் வந்து வழிகாட்டிய பெருமைக்கு உரிய காஞ்சி-குமரக்கோட்டத்தை நாமும் தரிசிப்போமா?!
காஞ்சிபுரத்தின் ராஜவீதியிலேயே அமைந்திருக்கிறது குமரக் கோட்டம். ஊரின் நடுவிலேயே அமைந்திருப்பதால், கோயிலை விசாரித்துச் செல்வது மிக எளிது. கண்ணையும் கருத்தையும் கவரும் குமரக்கோட்டத்தின் ராஜ கோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைகிறோம். கொடிமரம், பலிபீடம், மயில் மண்டபத்தைக் கடந்ததும் வலப்புறத்தில் மிகப்பெரியவராய் காட்சி தருகிறார் வரசித்தி விநாயகர். பெயருக்கேற்ப வரப்பிரசாதி என்கிறார்கள் பக்தர்கள். அந்த அண்ணனை வணங்கி வரம்பெற்றுவிட்டு அழகனைத் தரிசிக்கச் செல்கிறோம்.
கருவறையில் ஒருமுகம்; நான்கு திருக்கரங்களுடன் பிரம்மச்சாரிய கோலத்தில் தரிசனம் காட்டுகிறான் முருகப்பெருமான். சற்றுப் பொறுங்கள்… முறைப்படி உள் பிராகாரத்தையும் வலம் வந்த பிறகு, இந்த அழகனை ஆற அமர பாதாதிகேசம் தரிசிக்கலாம்.
உள் பிராகாரத்தை வலமாக வரும்போது முதலில் சந்தான கணபதி. அவரை அடுத்து தண்டபாணி தெய்வம். இவருடைய சந்நிதியின் இருபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் விநாயகரையும் மேற்கில் மீனின் மீது அமர்ந்தபடி சடாதரியாகக் காட்சிதரும் மச்சமுனியின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். தொடர்ந்து சண்முகரையும், மயூரவாகனரையும் தரிசிக்கிறோம். மயில் மீது அமர்ந்திருக்கும் இந்த முருகப்பெருமானின் இருபுறமும் வள்ளி-தெய்வானை பெருமாட்டிகள். அடுத்து, யாகசாலையும் பள்ளியறையும் அமைந்துள்ளன. பள்ளியறையை அடுத்தாற் போன்று உருகும் உள்ளம் பெருமாள் சந்நிதி. இக்கோயிலில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்று விரும்பி வந்து சந்நிதி கொண்டிருக்கிறாராம் இந்தப் பெருமாள்!
மேலும், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள் மற்றும் நவகிரகங்களைத் தரிசிக்க முடிகிறது. நவகிரகத்தில் சூரியதேவன் தன் தேவியருடன் காட்சி தருவது சிறப்பு. தெய்வானை சந்நிதியை அடுத்து கச்சியப்ப முனிவர், அருணகிரி நாதர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். இப்பிராகரத்திலேயே மடைப்பள்ளியும் தியான மண்டபமும் அமைந்துள்ளன. தியான மண்டபத்தை அடுத்து, திருச்சுற்றின் மேற்கு கோடியில் வடக்கு நோக்கிய சந்நிதியில் நாக சுப்ரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இந்த திருமூர்த்தங்களுக்கே திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதே மண்டபத்தில் உற்சவத் திருமேனிகளையும் நாம் வழிபடலாம். மேலும் மூலவரின் உற்சவ விக்கிரகமும் தனிசந்நிதியில் அமைந்திருக்கிறது.
சரி! இனி, மூலவரைத் தரிசிக்கச் செல்வோம்.
விண்ணவர் யாவரும் பணிந்து தொழத் துடிக்கும் திருத்தாள்களும், செப்பழகுடைய திருவயிறுந்தியும், முத்தணி மார்பும், அகம் குளிர அருள்பொழியும் முக அழகும், அதில் தண்ணருள் சுரக்கும் கண் மலர்களும்… அப்பப்பா நாள்முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இத்தலத்துக் குமரனை. அவ்வளவு பேரழகு!
மூலவரான சுப்ரமணியர் ஒரு திருமுகமும், நான்கு திருக் கரங்களுடனும் அருள்கிறார் என்று பார்த்தோம் அல்லவா? அவரின் மேலிரு கரங்களில் ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் திகழ, கீழ் வலக் கரத்தால் அபய ஹஸ்தம் காட்டியும், இடக் கரத்தை தொடையின் மீது வைத்தவாறும், அருட்காட்சி தருகிறார் இந்த வேலவன். மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாத இன்னொரு சிறப்பு… இங்கே மூலவருக்கு அபிஷேகத்துக்கு முன்னர் எண்ணெய்க்குப் பதில் தேனாலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், முதலாவதாக பஞ்சாமிர்த அபிஷேகமே செய்யப்படுகிறது.
மூலவர் சுப்ரமண்யர் சந்நிதிக்கு எதிர்புறத்தில் சிவனார் சந்நிதி இருக்கிறது. இவருக்கு தேவசேனாதீஸ்வரர் என்று திருநாமம். பிரணவத்துக்குப் பொருள் தெரியாததால் பிரம்மதேவனை முருகக் கடவுள் சிறையில் அடைத்ததும், பிறகு சிவனாருக்கே அவர் பிரணவத்தின் பொருள் உரைத்த கதையும் நாமறிந்ததே. அப்படி பிரம்மன் சிறைப்பட்டபோது, அவரை விடுவிக்கும்படி நந்தியின் மூலம் சொல்லியனுப்பினார் சிவனார். ஆனாலும் பிரம்மனுக்கு விடுதலை கிட்டவில்லை. தந்தையின் கட்டளையை மீறியதால் முருகப்பெருமானுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க இங்கே சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டாராம் முருகப்பெருமான்.
இங்கே முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகமும், ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 12 நாட்கள் நடைபெறும் விசாகப் பெருவிழாவில் மூன்றாவது நாளன்று மயில் வாகனத்தின் மேல் முருகப் பெருமான் திருவீதி உலா வருகிறார். அதே நாளில் கச்சியப்பர், அருணகிரிநாதர், நவவீரர்கள் ஆகியோரின் புறப்பாடும் நடைபெறுகின்றன. முருகப்பெருமான் திருவீதி உலா முடிந்து ஆலயத்தின் அருகே வரும்போது பிரம்மாவின் திருவுருவத்துக்கு அலங்காரம் செய்து அவர் முன்பு நிறுத்துவர். இதன் விளக்கமாவது பிரணவத்தின் பொருளை முருகப்பெருமான் வினவுவதும், பதில் தெரியாமல் பிரம்மதேவர் விழிப்பதுமேயாகும். பின்னர் பிரம்மதேவர் முருகனை மூன்று முறை வலம் வந்து வழிபடுவதாக அந்த வைபவம் நடைபெறும்.
உற்சவத்தின் பத்தாம் நாள் சண்முகப் பெருமானின் தேர்த் திருவிழாவும், தீர்த்தவாரியும் நடைபெறும். பதினோராம் நாள் திருவிழாவாக வள்ளி கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் இறுதியாக திருவூடல் உற்சவம் நடைபெறுகிறது. மற்றொரு திருவிழாவான கந்தசஷ்டி ஐப்பசி மாதம் வளர்பிறையில் ஆறு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவின்போது, செங்குந்த மரபைச் சேர்ந்த அன்பர்கள் காப்புக் கட்டி, வேடமணிந்து இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை நாடகமாக நடித்து காட்டுவர். இது இந்த விழாவின் ஓர் சிறப்பாகும்.
இவை அல்லாமல் மாதந்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி அன்று காலை 11 மணியளவில் நவகலச ஹோமமும், அதனைத் தொடர்ந்து அபிஷேகமும், இறுதியாக கலச அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் எந்திரப் பூஜை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று காலை மாலை ஆகிய இரு வேளைகளில் சமய சொற்பொழிவுகளுடன் இரவில் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
அம்மையப்பருடன் முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தம்’ என்று வழங்குவர். அதேபோல் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நடுவில் குமரக்கோட்டம் அமைந்திருப்பதால், இந்த மூன்று கோயில்களும் சேர்ந்து சோமாஸ்கந்த அமைப்பில் திகழ்வது பெரும் சிறப்பாகும்.
வரும் ஆடி மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை (ஜூலை – 28) அன்று ஆடிக்கிருத்திகை வருகிறது. முருகனுக்கு மிக உகந்த இந்தப் புண்ணியத் திருநாளில் காஞ்சிக்குச் சென்று குமரக்கோட்டத்து அழகனை வழிபட்டு அருள்பெற்று வருவோமே!