சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் என்ன ஆயிற்று? விடிய விடிய தேடுதல் வேட்டை
சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேற்று காலை 9 மணிக்கு 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 என்ற விமானம் புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் மாயமானது எப்படி? விமானத்தில் சென்ற 29பேர்களின் கதி என்ன என்பது குறித்து கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காததால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. மலேசிய விமானம் MH 370 கதி இந்த விமானத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சப்படுகிறது.
இந்த விமானத்தை தேடும் பணியில் 7 விமானங்கள், 8 கப்பல்களுடன் இந்திய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும், காணாமல்போன விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விமானத்தை தேடும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இன்று அவர் சென்னை வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஏ.என். 32 என்ற இந்த விமானம் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்கு நேற்று காலை புறப்பட்ட இந்த விமானத்தில் 15 விமானப்படை அதிகாரிகள், விமானப்படை வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், 4 விமானிகள், 2 ஊழியர்கள் என மொத்தம் 29 பேர் இருந்தனர். மேலும் போர்ட் பிளேயர் விமானப்படை தளத்துக்கு தேவையான பொருள்களும் அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
விமானம் புறப்பட்ட 16 நிமிஷங்கள் வரை கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பிலும், ரேடாரின் கண்காணிப்பிலும் இருந்தது. ஆனால் திடீரென விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதோடு ரேடாரின் கண்காணிப்பில் இருந்தும் மறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16வது நிமிடத்தில் கட்டுப்பட்டு அறையில் தொடர்பில் இருந்து விமானம் மறைந்தாலும் 42-வது நிமிடத்தில்தான் அது காணாமல் போயிருப்பதை விமானப்படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனே அவர்கள், அந்த தகவலை விமானப்படை உயர் அதிகாரிகளிடமும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்தனர். இதையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படையின் 3 டார்னியர் விமானங்களும், சாகர், சமுத்திரா பஹரேதார் ஆகிய இரு கப்பல்களும் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டன.
இந்த விமானம் பறந்தபோது கடைசியாக அளித்த சிக்னலின் அடிப்படையிலும், விமானம் பறந்த வேகத்தின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து சுமார் 125 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்து 151 நாட்டிகல் மைல் ( ஒரு கடல் மைல் என்பது 1.85 கி.மீ. ஆகும்.) வரையிலான தொலைவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் விமானம் காலை 9.12 மணியில் இருந்து 9.15 மணிக்குள் 23,000அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று விமானப் படை அதிகாரிகள் கருதுகின்றனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் விமானிகள் விமானத்தை சென்னைக்கே திருப்ப முயற்சித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படையினர், கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், கடற்படைக்கு சொந்தமான கார்முக்,காரியல்,ஜோதி,குதார் ஆகிய 4 கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல் உள்பட 7 விமானங்கள், 8 கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.