காலை 6 மணிக்கே இணையதளத்தில் ‘கபாலி’. என்ன செய்கிறது மத்திய அரசு? நீதிபதி காட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை இணையதளங்களில் பதிவு செய்யும் இணையதளங்கள் மீது தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் தடையை மீறி ஏராளமான இணையதளங்களில் இந்த படம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.கிருபாகரனிடம் வழக்குரைஞர் பி.குருமூர்த்தி முறையிட்டுள்ளார். படம் ரிலீஸ் ஆன நேற்று காலை 6.20 மணிக்கு ஒரு வலைதளத்தில் இருந்து கபாலி படத்தை பதிவிறக்கம் செய்துள்ளேன் என்று கூறி, பதிவிறக்கம் செய்யப்பட்ட கபாலி படத்தின் குறுந்தகட்டையும் நீதிபதியிடம் அவர் வழங்கினார்.
ஐகோர்ட் தடை விதித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் குருமூர்த்தி, “கபாலி படம் எந்தெந்த வலைதளங்களில் வெளியானது? இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களை கொண்ட பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். பின்னர் நீதிபதி, ‘அந்த பட்டியலை வரும் 26-ஆம் தேதி தாக்கல் செய்யுங்கள். ஏற்கெனவே நிலுவையில் உள்ள கபாலி படம் தொடர்பான வழக்கும் அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று கூறினார்.