பாகிஸ்தானின் ஒருபகுதியாக காஷ்மீர் உருவாகும். நவாஸ் ஷெரீப் சூளுரை
பாகிஸ்தானின் ஒருபகுதியாக காஷ்மீர் உருவாகும் நாளுக்காக காத்திருக்கிறோம் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, முஷாபராபாத் நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார்.
லண்டனில் இதய அறுவை சிகிச்சை செய்த பின்னர் பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, “காஷ்மீரில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை என்றும் மறக்கக் கூடாது. காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை அங்கு போராட்டங்கள் ஓயாது. காஷ்மீர் போராட்டத்தில் உயிர்நீத்தத் தியாகிகளுக்காகப் பிரார்த்தனை செய்வோம். மேலும், பாகிஸ்தானின் ஒருபகுதியாக காஷ்மீர் உருவாகும் நாளுக்காக காத்திருப்போம் என்று ஆவேசமாக பேசினார்.