அண்ணா நூற்றாண்டு நூலக பராமரிப்பு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அண்ணா நூற்றாண்டு நூலக பராமரிப்பு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

libraryதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பராமரிப்பு இன்றி இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டினர். மேலும் இந்த நூலகத்தையே இடம் மாற்றும் முயற்சியும் நடந்தது. ஆனால் நீதிமன்றம் தலையீட்டால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் என்பவர் சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நூலகம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை சமீபத்தில் விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம். சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையர்களாக நியமனம் செய்தது. இவர்கள் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை ஜூன் 31-ம் தேதிக்குள் சரிசெய்யும்படி கடந்த ஏப்ரல் மாதம் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும். ஆகவே, 2 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகப் பராமரிக்கும்படி இந்த நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் நூலகத்தை முறையாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 ஆண்டுகளில் மொத்தமே ஆயிரத்து 432 புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை. எனவே, இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் “அண்ணா நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு குறித்து பல தடவை அவகாசம் அளித்தும், குறைபாடுகள் களையப்படவில்லை. கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறோம். அதற்குள் குறைகளைச் சரிசெய்து முறையாகப் பராமரிக்காவிட்டால், அந்த நூலகத்தைப் பராமரிக்க ஒரு குழுவை ஏற்படுத்தி, பராமரிப்புப் பணியை அக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவோம். அதற்கு ஆகும் செலவுகளை அரசு வழங்க நேரிடும்” என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply