ஜெயலலிதா பாணியை பின்பற்றுவோம். கருணாநிதிக்கு கனிமொழி அட்வைஸ்
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் தைரியமான முடிவை அதிமுக பொதுச்செயாளர் ஜெயலலிதா எடுத்து மீண்டும் ஆட்சியை பிடித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே ஃபார்முலாவை கடைபிடித்து வெற்றி பெற்றார்.
ஆனால் திமுகவோ கடைசி வரை தேமுதிக உள்ளிட்ட ஒருசில கட்சிகளை கூட்டணியில் இணைக்கவே முயற்சியில் ஈடுபட்டது. திமுகவும் தனித்து நின்றிருந்தால் முடிவு வேறு மாதிரி மாறியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்நிலையில் ஜெயலலிதா பாணியை பின்பற்றி வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்போம் என திமுக தலைவர் கருணாநிதிக்கு கனிமொழி ஆலோசனை கூறி வருவதாகவும், இந்த ஆலோசனையை கருணாநிதியும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கோஷ்டி பூசலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது. ராஜினாமா செய்த இளங்கோவனுக்கு பதிலாக ஒரு மாதம் ஆகியும் புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் திமுக, காங்கிரஸை கழட்டிவிட்டால் அதன் நிலைமை என்ன என்பதை நினைக்கவே பரிதாபமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர். திமுக, அதிமுக தனித்து நின்றால் மற்ற அனைத்து கட்சிகளும் கண்டிப்பாக பரிதாபமான தோல்வியை தழுவவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.