தி.மு.கவை அழிக்க கருணாநிதி போதும். வேறு யாரும் தேவையில்லை. கருப்பசாமி பாண்டியன்
1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.கவில் தீவிரமாக கட்சி பணியாற்றி வந்தவரும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கருப்பசாமி பாண்டியன், ஜெயலலிதா அதிமுக செயலாளர் ஆனபோதும் கட்சிக்காக உழைத்தார். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென அ.தி.மு.க தலைமையோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அதிமுகவில் இருந்து தி.மு.கவில் ஐக்கியமானார்.
இந்நிலையில் திமுக திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன், கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, கடந்த ஆண்டு கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அதுமுதல் மீண்டும் அதிமுகவில் இணைய கருப்பசாமி பாண்டியன் முயற்சித்து வந்த நிலையில் இன்று ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
அதிமுகவில் இணைந்த பின்னர் கருப்பசாமி பாண்டியன் பேட்டி ஒன்றில் கீழ்க்கண்டவாறு கூறினார்.
உங்கள் வேண்டுகோளை முதல்வர் ஏற்பதற்கு ஆறு மாதம் ஆகிவிட்டன. இவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணம்?
எது எப்போது நடக்குமோ அப்போதுதான் நடக்கும். நாம் எதை நினைத்தாலும், அதை நிறைவேற்றுவதற்கு கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்தது நடக்கும். தேர்தல் நேரத்தில் என்னைச் சேர்ப்பதில் என்ன பிரச்னை இருந்ததோ தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு அம்மா என்னை வரச் சொல்லி உத்தரவிட்டார். உடனே கிளம்பி வந்துவிட்டேன்”.
1972-ம் ஆண்டில் இருந்து கிளைக் கழகச் செயலாளர் முதற்கொண்டு மாவட்ட, மாநில பொறுப்புகளில் பதவி வகித்தீர்கள். மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
” என் வாழ்நாளில் இன்று மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் அ.தி.மு.கவில் இணைந்தேன். கங்கை கொண்டான் பகுதியின் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். பிறகு, கிளைக் கழகச் செயலாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என அடுத்தடுத்து பதவி கொடுத்தார். 77-ம் ஆண்டு ஆலங்குளம் தொகுதி, 80-ம் ஆண்டு பாளையங்கோட்டை என தொடர்ந்து எம்.எல்.ஏவாக பதவி வகித்தேன். 87-ம் ஆண்டு முதல்வர் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அம்மா அணியில் இணைந்தேன். கட்சி மீண்டும் அம்மா கரங்களுக்கு வந்த பிறகு, மாவட்டச் செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார் அம்மா. 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி கொடுத்தார். கட்சியின் வெள்ளிவிழா மாநாட்டை பாளையங்கோட்டையில் நடத்தினோம். மேடையில் மட்டும் 17 மணி நேரம் நின்றிருந்தார் அம்மா. அதன்பிறகு, காலச் சூழலால் தி.மு.கவில் இணைந்தேன்”.
‘தி.மு.கவில் துரோகிகளும் முதுகில் குத்துபவர்களும்தான் இருக்கிறார்கள்’ என்கிறீர்களே, அப்படி என்ன நடந்தது?
” தி.மு.கவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. கருணாநிதி மட்டும்போதும். ‘ மாநில அளவில் கட்சி இரண்டாக இருக்க வேண்டும். மாவட்ட அளவில் மூன்றாக இருக்க வேண்டும்’ என்றுதான் விரும்புவார். ஒரு மாவட்டத்தில் ஒரு தலைமையின் கீழ் இயங்கினால், இன்னொருவரைக் கொம்பு சீவி வளர்ப்பது தி.மு.கவில் சகஜம். அங்கு நான் செய்த ஒரே குற்றம், ‘ ஸ்டாலின்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும்’ என்று சொன்னதுதான். இதை கருணாநிதி, கனிமொழி, அழகிரி ஆகியோரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூன்று பேரும் என் முகத்திற்கு நேராகவே எதிர்ப்பைக் காட்டினார்கள். கோபித்துக் கொண்டார்கள். ‘குறுநில மன்னர்களாக இருப்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றோம்’ என்றார் கருணாநிதி. அதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை.
மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள் என்பதால்தான், மாவட்டங்களைத் துண்டாடினார்கள். நான் பொறுப்பில் இருந்து விலகியபோது ஒன்றைத்தான் சொன்னேன். ‘கலெக்டராக வேலை பார்த்த மாவட்டத்தில் தாசில்தாராக வேலை பார்க்க முடியாது’ என்றேன். இந்த வார்த்தைகள் கருணாநிதிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ஒருமுறை அவருடைய வீட்டிற்குப் போனபோது, ‘என்ன வழி தவறி வந்துட்டியா?’ என்றார். மனதுக்குள் இருந்த வருத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். ‘ விசுவாசத்தைச் செயலில் காட்டுங்கள்’ என்றார். விசுவாசத்திற்கே மரியாதை இல்லாதபோது, அங்கிருப்பதில் என்ன பயன் என்பதால் வெளியேறினேன்”.
15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரை சந்தித்தீர்கள். என்ன சொன்னார்?
” மிகுந்த முகமலர்ச்சியோடு என்னை வரவேற்றார். ‘மிகுந்த மகிழ்ச்சி’ என்றார். நான் அவரிடம், ‘ என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய வாழ்வின் இறுதிக்காலம் வரையில் விசுவாசத்தோடு கட்சிக்கு உழைப்பேன்’ என்றேன். மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் என்னுடைய குடும்பத்தோடு நான் இருந்த நாட்கள் மிகவும் குறைவு. இன்றைக்கு அரசியலில் மறு பிறப்பை எடுத்திருக்கிறேன். மகிழ்ச்சியோடு ஊருக்குச் செல்கிறேன்”