வீட்டிலிருந்தே வருமானம் குவிக்கலாம்!

வீட்டிலிருந்தே வருமானம் குவிக்கலாம்!

6‘வீட்டுல இருந்தே ஏதாச்சும் பிசினஸ் பண்ணலாமா?’ என்பதுதான், இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகளின் கேள்வி, தேடல். ‘‘நிச்சயம் முடியும். அதற்கான வழிகள் பல இருக்கின்றன’’ என்று சொல்கிறார்கள், வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு சௌகரியமான ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் வெற்றிகரமாக சம்பாதித்துக்கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த இந்தப் பெண்கள். இவர்களின் அனுபவங்கள் பேசுகின்றன… மற்றவர்களுக்கு வழிகாட்டலாக!

சமைக்கத் தெரிந்தால்… சபாஷ் லாபம்!

‘‘உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா? 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிக்கலாம்’’ என்கிறார் துர்கா லட்சுமி. ஏழு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே கேட்டரிங் பிசினஸ் செய்துவருபவர்.

‘‘நான், எம்.ஏ பட்டதாரி. ஆனா… கல்யாணம், குழந்தைனு ஆனதுக்கு அப்புறம் வேலைக்கு போக முடியாம இருந்த சூழல்லதான், கேட்டரிங் பிசினஸைத் தொடங்கினேன். வேலைக்காக பெருநகரங்களில் வந்துகுவிந்து, வீட்டுச் சாப்பாடு இல்லாம அவதிப்படுறவங்களை மனசுல வெச்சுதான் நம்பிக்கையோட இறங்கி னேன். என்னோட அப்பா வேலை செஞ்ச நிறுவனத்துல இருக்குறவங்களுக்கும், உறவினர்களுக்கும் முதல்ல சமைச்சுக்கொடுக்க, பிசினஸ் பிக்-அப் ஆகி… இன்னிக்குவரை ஏறுமுகமாதான் போயிட்டிருக்கு.

வீட்டில் இருந்தபடியே காலை, மதிய, இரவு உணவுனு சமைச்சு, விற்பனை செய்யலாம்; டோர் டெலிவரியும் கொடுக்கலாம். ஆரம்பத்தில் அருகில் உள்ள அலுவலகங்கள், மேன்ஷன்களை அணுகி வாய்ப்பு கேட்கலாம். சுவைக்கும், தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் நிரந்தரம் ஆவாங்க என்பதோட, அவங்க மூலமா நிறைய புது வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. விழா, விசேஷம்னு சில பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்போது, வாடகைக்கு பாத்திரங்கள் எடுத்து, தற்காலிக சமையல் ஆட்களை அமர்த்திக்கலாம்.

ஆர்டர்கள் வரும் அளவுக்கு சரியா சமைக்கணும். வடை மீதமாகிட்டா வடகறி செய்வது போன்ற சில விஷயங்களும் செய்யலாம். ஆண்டு முழுக்க வருமானம் வர்ற தொழில் இது. மொத்தத்தில், பெண்கள் தைரியமா இறங்கலாம் கேட்டரிங் பிசினஸில்!’’

பணம் கொட்டும் டெய்லரிங் பிசினஸ்!

‘‘15 ஆண்டுகளுக்கு முன்ன எனக்கு கல்யாணம் ஆச்சு. அப்பவே டெய்லரான என் கணவருக்கு உதவியா இருந்து, நானும் டெய்லரிங் கத்துக்கிட்டு தொழிலில் இறங்கினேன். அக்கம்பக்கத்து பெண்கள் என்னோட கஸ்டமராகி, இப்போ 15 பெண்களுக்கு வேலைகொடுத்துட்டு இருக்கேன்’’ என்று சொல்லும் சத்யபாமாவின் குரல் முழுக்க உற்சாகம்.

‘‘இன்னிக்கு புத்தாடை அணிய மக்களுக்கு பண்டிகை போன்ற சிறப்புக் காரணங்கள் எல்லாம் தேவையில்லை. அந்தளவுக்கு நடுத்தரக் குடும்பங்களில்கூட ஆடைகளுக்கு யோசிக்காம செலவு செய்றாங்க. மக்களோட இந்த வாழ்க்கைமுறை மாற்றம், டெய்லரிங் பிசினஸுக்கான பெரிய ப்ளஸ். டெய்லரிங் தொழில்செய்ய நினைக்கும் பெண்கள், மூணு மாசம் பயிற்சி வகுப்புக்கு போயிட்டு, வீட்டில் இருந்தபடியே இந்த பிசினஸைத் தொடங்கலாம். தையல் மெஷின், ஆரி வொர்க் போன்ற சில வேலைப்பாடுகளுக்கு மெட்டீரியல் வாங்குற செலவுனு இந்தத் தொழிலுக்கு 10 – 12 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவைப்படும். வழக்கமான பேட்டர்னில் நேர்த்தியா தைக்கிறது என்பதைத் தாண்டி, வித்தியாசமான வடிவமைப்புகள் மற்றும் வேலைப்பாடுகள்தான் போட்டிகளை சமாளிச்சு தொழிலில் நிலையான இடம்பிடிக்க கைகொடுக்கும். கூடவே, 10 பிளவுஸ் தைச்சு சம்பாதிக்கிற காசை, ஒரு அனார்கலி சுடிதார் தைச்சு சம்பாதிச்சுடலாமே?!

டிசைனிங் ஏரியாவுக்குள் நுழையுறது, வருமானத்தை சட்டுனு மேல கொண்டுபோகும். அதனால, பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தில் செலிப்ரிட்டிகளை ஃபாலோ செய்து ட்ரெண்டில் அப்டேட்டடா இருக்கணும். ஃபேஷன் டிசைனிங் தொடர்பான சில பிரத்யேக பயிற்சி வகுப்புகளுக்கும் அப்பப்போ போயிட்டே இருக்கணும். ஆர்டர்கள் அதிகமாகும்போது, லேபர்களை வேலைக்கு அமர்த்தி கடையை விரிவுபடுத்தலாம். பயிற்சி வகுப்புகளும் எடுக்கலாம். சரியான விலை, குறித்த நேரத்தில் டெலிவரி, எல்லையில்லா கற்பனைத்திறனோட வேலை செஞ்சா இந்த தொழில்ல பெரிய அளவுல வளர முடியும்!’’

பேப்பர் கப், பிளேட்… நாளொன்றுக்கு 1,000 ரூபாய் லாபம்!

‘‘இப்போ எல்லா விழாக்களிலும் பேப்பர் கப், பிளேட், டைனிங் ரோல் எல்லாம் அவசியத் தேவைனு ஆயிடுச்சு. படித்த, படிக்காத பெண்கள்னு பேதம் இல்லாம இந்தத் தொழிலில் ஒரு வாரம் பயிற்சி எடுத்து, மெஷினை இயக்கக் கத்துக்கலாம். வீட்டில் இருந்தே இதை சிறுதொழிலா செய்ய லாம்’’ என்கிறார் மணிமேகலை. பேப்பர் கப், பிளேட், டைனிங் ரோல் போன்றவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஹோல்சேலாக விற்பனை செய்து வருபவர்.

‘‘சராசரியா 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் பேப்பர் கப், பிளேட் அல்லது பாக்கு மட்டை பிளேட், டைனிங் ரோல்னு விருப்பத்துக்கு ஏற்ப, மெஷினையும், மூலப்பொருளையும் வாங்கி இந்த பிசினஸை தொடங்கலாம். வங்கிக் கடனும் பெறலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மெஷின்கள் கிடைக்குது. ஒரே ஆளா மெஷின்களை இயக்கிட முடியும். ஒரு நாளைக்கு சராசரியா 6 – 7 மணிநேரம் ஆக்டிவ்வா வேலைசெய்தாலே, 1,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். உற்பத்தியில் உதிரியாகும் பேப்பர்களை மீண்டும் மறுசுழற்சி செய்யும் கடைகளுக்கு விற்பனை செய்துடலாம். தேவைக்கேற்ப உதவிக்கும் ஆட்களை வைத்துக்கொள்ளலாம்.

தயாரித்த உற்பத்திப் பொருட்களை ஹோல்சேல் டீலர்களிடமோ, அருகிலுள்ள ஹோட்டல், மளிகைக்கடை, டீ கடைகளில் நேரடியாகவோ விற்பனை செய்யலாம். டைனிங் ரோல் பேப்பர், கப் மற்றும் பிளேட்டுகளில் மணமக்களின் பெயர்களை நாமளே அச்சடித்துக் கொடுப்பது மாதிரியான புதிய முயற்சிகளை செய்யும்போது, போட்டியாளர்களை சமாளிச்சு பிசினஸுக்கு நல்ல பிக்-அப் கொடுக்க முடியும். ஆரம்பத்தில் சற்று குறைவான விலையில் உற்பத்தி பொருட்களை விற்பனைசெஞ்சு, நிறைய கஸ்டமர்களை பிடித்துக்கொள்வது நல்லது!’’

பியூட்டி பார்லர்…. பவர்ஃபுல் பிசினஸ்!

‘‘நான் முதல்ல வீட்டிலேயே ஒரு போர்ஷனை ஒதுக்கிதான் பியூட்டி பார்லரை நடத்த ஆரம்பிச்சேன். கிடைச்ச லாபம், தனியா ஒரு பார்லரை தொடங்க வெச்சிருக்கு’’ எனக் கூறும் மோனா, அழகுக்கலை தொழிலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

“சின்ன வயசுல இருந்தே அழகுக்கலையில எனக்கு ரொம்ப ஆர்வம். ஃப்ரெண்ட்ஸ், உறவினர்கள் நிறைய பேருக்கு ஃப்ரீயா மேக்கப் போட்டுவிடுவேன். பிற்காலத்துல இதுவே பிரதான தொழிலானதும், எங்கிட்ட ஃப்ரீயா மேக்கப் போட்டுக்கிட்ட பலரும் ரெகுலர் கஸ்டமராகிட்டாங்க.

‘‘அழகுக்கலையில் அடிப்படையில் ஆர்வம் உள்ள பெண்கள், 3 – 6 மாசம் ஒரு பயிற்சி வகுப்பை முடிச்சிட்டு, வீட்டிலேயே சின்ன அளவில் இதைத் தொழிலா தொடங்கலாம். காஸ்மெடிக் பொருட்கள், பார்லருக்கான கண்ணாடி, சேர்கள், உபகரணங்கள்னு 10 – 15 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்களை கஸ்டமர்கள் ஆக்கலாம். பொதுவா, விடுமுறை நாட்களில்தான் கஸ்டமர்கள் அதிகம் வருவாங்க என்பதால, அப்போது பல ஆயிரங்கள் சம்பாதிக்கலாம்.

ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவங்களுக்கான பிரத்யேக அழகுப் பராமரிப்பு விஷயங்களை கொஞ்சம் அக்கறையோட கவனிச்சு செய்யும்போது, தானாகவே நம்ம மேல அவங்களுக்கு நம்பிக்கை வந்து ரெகுலர் கஸ்டமர்கள்ஆகிடுவாங்க. அவங்க மூலமாகவே கஸ்டமர்கள் பெருகிடுவாங்க. அடுத்தகட்டமா, பிரைடல் மேக்கப் செய்ய ஆரம்பிக்கலாம். பார்லருடன் கூடவே சுடிதார் மெட்டீரியல், புடவை, ஃபேஷன் ஜுவல் செட், காஸ்மெடிக் பொருட்கள் விற்பதுனு துணைத் தொழில்களும் செய்யலாம். கஸ்டமர்கள் அதிகமாகும்போது, வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பார்லரை அமைச்சுக்கலாம். உத்தரவாத லாபம் அள்ளக்கூடிய தொழில் இது!”

Leave a Reply