சென்டாக்: பொறியியல் இறுதிக் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
புதுச்சேரி சென்டாக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட சென்டாக் கலந்தாய்வு கடந்த ஜூலை 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடந்தது. இதில் மொத்தமுள்ள 4,191 இடங்களில் 2226 இடங்கள் நிரப்பப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பொறியியல் பாடப்பிரிவில் காலியாகவுள்ள 1,965 இடங்களை நிரப்புவதற்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆக.1ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எஸ்சி பிரிவு மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து 4 மணி வரை 199 முதல் 178.667 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடக்கிறது. தொடர்ந்து 2ஆம் தேதி 178.333 முதல் 158.333 வரை, 3ஆம் தேதி 158 முதல் 139 வரை, 4ஆம் தேதி 138.667 முதல் 105.667 வரை, 5-ம் தேதி காலை 9 மணிக்கு 105.333 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
5ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை 198 முதல் 158.666 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான பி.பார்ம் கலந்தாய்வு நடக்கிறது.
காலி இடங்கள் விவரம்:அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலியிட விவரம்:
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி 53, காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி 48, ஆச்சார்யா பொறியியல் கல்லூரி 183, ஆல்பா பொறியியல் கல்லூரி 123, அவ்வையார் பொறியியல் கல்லூரி 101, காரைக்கால் பாரதியார் பொறியியல் கல்லூரி – 102, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி 102, கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – 274, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 69, பிரிஸ்ட் பல்கலைக்கழகம் 145, ராக் பொறியியல் கல்லூரி 143, ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி 71, காரைக்கால் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரி 118, கிருஷ்ணா பொறியியல் கல்லூரி 116, கணேஷ் பொறியியல் கல்லூரி 178, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி 77, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி 62.